மக்களை குறிவைக்கும் ஒற்றை காட்டு யானை… துரத்திய போது ஓடிய பெண் கவுன்சிலருக்கு கைமுறிவு… பீதியில் வால்பாறை மக்கள்..!!
Author: Babu Lakshmanan17 July 2022, 12:59 pm
கோவை : வால்பாறையில் யானை துரத்தியதில் 18வது வார்டு கவுன்சிலருக்கு கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர், பன்னி மேடு பங்களா டிவிஷனில் நியாய விலை கடை நடத்தி வருகிறார். 18வது நகர மன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்து வருகிறார். நேற்று நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு விநியோகம் செய்துவிட்டு தன்னுடைய கணவருடன் இருசக்கர வாகனத்தில் சோலையார் அணையில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் செல்லும் வழியில் ஒற்றைக் காட்டு யானை இருவரையும் துரத்தி உள்ளது. இதில் அவருடைய கணவர் பாண்டி வண்டியை திருப்புவதற்குள் யானை நெருங்கி வந்து விட்டதால், மனைவி சாலையில் ஓடி உள்ளார். இவரை பின்தொடர்ந்த காட்டு யானை துரத்தியதால் வேர்க்க விறுவிறுக்க ஓட்டம் பிடித்தனர். யானை பின் தொடர்ந்ததால் கணவரை இருசக்கர வாகனத்தில் நீங்கள் ஓடி விடுங்கள் நான் கீழே இறங்கி தப்பித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பின்னர், உடனே சாலையின் மேல் ஏறி உள்ளார். அப்போது, கால் வலிக்கி கீழே விழுந்ததால் யானை பக்கம் நெருங்கி வந்து அதிர்ஷ்டவசமாக அவரை தாண்டி கணவரை துரத்தியது. கணவர் சிக்காத காரணத்தால் மீண்டும் ஜெயந்தியை துரத்தியதால் எதிரே வந்த டாடா சுமோ வாகனத்தில் ஏறி உயிர் தப்பினார். உடனடியாக அவரை வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தெரிவித்து வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தகவல் கோரிக்கை வைத்தனர்.