ஓடுங்க.. ஓடுங்க.. மிரட்டும் காட்டு யானைகள்.. – பயிர்களைக் காக்க போராடும் விவசாயிகள்..!

Author: Vignesh
17 August 2024, 6:17 pm

கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து விளைநிலங்களில் புகுவதும், விவசாயிகளின் கொட்டகைகளை பிரித்து அதில் இருக்கும் புண்ணாக்கு மற்றும் அரிசியினை உண்பதும் வாடிக்கையாகி வருகிறது.

குறிப்பாக தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, தித்திபாளையம், கரடிமடை மற்றும் மத்திபாளையம் போன்ற பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மதுக்கரை வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து மத்திபாளையம், சென்னனூர், தீத்திபாளையம் பகுதிகளுக்கு தாயுடன் வந்த குட்டி யானை கூட்டம் வாழை தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது.

இதனை கண்ட விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானைகளை தீத்திபாளையம் அடுத்த அய்யாசாமி மலை அடிவாரப்பகுதியில் உள்ள கரட்டு பகுதிக்கு மேலாக யானையை விரட்டி காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதாகவும், கூட்டம் கூட்டமாக வருவதோடு மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் செல்வதாலும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!