பாரதியார் பல்கலை., முகாமிட்ட காட்டு யானைகள்… வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் கோவை வனத்துறையினர் திணறல்!!
Author: Babu Lakshmanan1 October 2022, 11:54 am
பாரதியார் பல்கலைக்கழகத்தில் புகுந்த காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி ஒட்டி உள்ள மருதமலை வனப் பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். கடந்த வாரங்களில் தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புகள் புகுந்து அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தி வந்தது.
இந்நிலையில் இன்று பாரதியார் பல்கலைக்கழக பின்புற வளாகத்துக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு வந்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காட்டு யானை கூட்டம் வனத்துறையினர் விரட்டும்போது, பாரதியார் பல்கலைகழக வளாகத்துக்குள்ளே மீண்டும் காட்டு யானைகள் வந்ததால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து, காட்டு யானைகள் அங்கும் இங்குமாக ஓடிச் சென்றதால் வனத்துறையினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
மேலும், மாலை வரை அதே பகுதியில் முகாமிட்டு இருந்ததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். மீண்டும் காட்டு யானைகள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பாரதியார் பல்கலைக்கழக அருகே முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை முதலே ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்கு பின்புறம் சுற்றி திரிந்து வருகிறது. யானையை காட்டு பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.