எப்பா சாப்பாடு எதுவும் இருக்கா.. கூட்டத்துடன் உணவு தேடி சுற்றித் திரியும் காட்டு யானைகள்..!
Author: Vignesh19 August 2024, 10:26 am
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில மாதங்களுக்கு முன் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக வனப் பகுதியை விட்டு கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் கூட்டம் வரத் தொடங்கியது.
பின்னர், பருவ மழைக் காலம் துவங்கி மலைகளில் வறட்சி நிலை மாறியது. இருந்த போதும், விவசாயிகளின் உணவுகளை ருசி கண்ட யானைகள் வனப் பகுதிகளுக்குள் செல்லாமல் அப்பகுதியிலே முகாமிட்டு ருசியான உணவுகளை உண்டு வாழக் கற்றுக் கொண்டதால் தற்பொழுது வரை சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து, அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், வனத் துறையினர் அதிகாரிகள் என அனைவரிடத்திலும், உரிய நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வனத் துறையினரும் யானைகளை கண்காணித்து விரட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிர நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு தொண்டாமுத்தூர், நரசிபுரம் அருகே உள்ள குப்பேபாளையத்தில் காட்டு யானை கூட்டம் புகுந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தோட்டத்துக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க அதனை கண்காணித்து விரட்டினர்.
இதனால், அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் யானைகளால் உயிருக்கும், உடமைகளுக்கும் மற்றும் பயிர்களுக்கும் சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் வாழ்க்கையை பயணித்துக் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.