ஹாரன் சவுண்ட்.. மிரண்டு போன காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து விபத்து..!
Author: Vignesh12 June 2024, 1:37 pm
மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து போலீஸ் எஸ்.ஐ காயம் ஏற்பட்டது.
நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் யானைகளை அனுப்பி வைத்த வனத்துறையினர். மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை,சிறுத்தை,மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் வனப்பகுதியின் ஒருபுறம் இருந்து மற்றொரு பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி இடம்பெயர்வது வழக்கம். இந்த நிலையில், சமீப காலமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.
இதனால், வனத்துறையினர் இரவு நேரங்களில் கூடுதலாக ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் இரவு மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் ஊட்டியில் இருந்து பிங்கர் போஸ்ட் கருப்பன் ஓலை பகுதியைச்சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர் மனோகரன்(52) என்பவர் தற்செயல் விடுப்பு எடுத்து தனது மகன் அன்பரசன்(24) உடன் தனக்கு சொந்தமான காரில் கோவை நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, கோத்தகிரி வியூ பாயிண்ட் அருகே சாலையின் குறுக்கே நின்றிருந்த இரு யானைகளை கண்ட அவர் காரை நிறுத்திவிட்டு அங்கேயே நின்றுள்ளார்.
அப்போது,மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற டூவீலரின் ஹாரன் சப்தத்தால் மிரண்டு போன இரு காட்டு யானைகளும் காரை தந்ததால் குத்தி கவிழ்த்துள்ளது. இதனால் கார் கவிழ்ந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக மனோகரன் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனத்துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரமாக போராடி இரு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் மனோகரனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்பினார்.காட்டு யானைகள் தாக்கியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போலீஸ் எஸ்ஐ ஒருவர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.