Swiggyல வேலை செஞ்சா கேவலமா? நானும் டிகிரி படிச்சவன்தா : இளைஞரின் கண்ணீருக்கு காவலரின் பணியிட மாற்றம் தீர்வாகுமா?
Author: Udayachandran RadhaKrishnan4 June 2022, 6:30 pm
Swiggy ஊழியரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போக்குவரத்து காவலரை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் (Swiggy) வேலை செய்து வருகிறார். தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்னை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாகவும், அதனை கேட்ட தன்னை போக்குவரத்து காவலர் தாக்கியதாகவும் இதற்கு ஒரு நீதி வேண்டுமென கேட்டுகொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், அவிநாசி சாலை ஃபன் மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி(நேசனல் மாடல்) வாகனம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகவும் அந்த வாகனத்தை தான் வழிமறைத்து நிறுத்தி ஓட்டுனரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டு கொண்டிருக்கும் போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், “இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார்” என கேட்டு தன்னை தாக்கியதாக தெரிவித்தார்.
மேலும் அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என கேட்டு பள்ளி வாகன ஓட்டுநரை அனுப்பி வைத்து விட்டு தன்னிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு சிறிது நேரம் கழித்து அனுப்பியதாக தெரிவித்தார்.
அந்த பெண் இது குறித்து கேட்டபோதும் போக்குவரத்து காவலர் அப்பெண்ணையும் நீங்கள் செல்லும் படி அனுப்பிவிட்டதாக தெரிவித்தார்.
தனியார் பள்ளி வாகனம் செய்த தவறை தட்டி கேட்டதற்கு தன் மீது தாக்குதல் நடத்தியது நியாமற்ற செயல் என்றும் இதுகுறித்து மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது அந்த காவலர் ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் வைரலான வீடியோவால் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர் செந்தில்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
0
0