‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் மோசடி… வருமானவரித்துறை அதிகாரி போல நடித்து வசூல் வேட்டை ; பெண் கைது..!!

Author: Babu Lakshmanan
11 February 2023, 11:48 am

கோவை ; வருமானவரித்துறை அதிகாரியாக நடித்து மோசடி செய்த பெண்ணை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மகளிர் தனியார் விடுதியில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண் மூன்று வாரங்களாக தங்கி இருந்துள்ளார். எம்.காம். பட்டதாரியான ராமலட்சுமி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்றும், மேலும் தான் வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், உடன் தங்கியிருந்த பெண்களிடம் கூறி நம்ப வைத்துள்ளார் என கூறப்படுகின்றது.

வருமான வரித்துறை அதிகாரியை போன்று ராமலட்சுமியின் நடை, உடை பாவனைகளை பார்த்த சக பெண்கள், அவரை வருமானவரித்துறை அதிகாரி என நம்பியுள்ளனர். இந்த நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட ராமலட்சுமி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஆளுக்கு தகுந்தார் போல், வேலைக்கு தகுந்தார் போல், ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.

மேலும், சில பெண்களிடம் லேப்டாப் மற்றும் கணினிகளை பெற்றுக் கொண்ட ராமலட்சுமி மாயமானார். நீண்ட நாட்களாக ராமலக்ஷ்மி விடுதிக்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த சக பெண்கள், இது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் ராமலட்சுமி ஏற்கனவே இதேபோன்று பல்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் லட்சக்கணக்கில் மோசடிகளை செய்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து, பதுங்கி இருந்த ராமலட்சுமியை கைது செய்தனர்.

இதனை அடுத்து ராமலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய தொடர்ந்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் ராமலட்சுமியின் மோசடிக்கு வேறு சிலரும் உடந்தையாக இருந்திருக்கலாம் என சந்தேகக்கும் காவல்துறை, அது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 440

    0

    0