சுகப்பிரசவம் ஆன இளம்பெண் உயிரிழப்பு… அவசர அவசரமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. காஞ்சி அரசு மருத்துவமனையில் கொடூரம்!!

Author: Babu Lakshmanan
22 December 2023, 8:47 pm

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சுக பிரசவம் ஆன இளம் பெண் குழந்தை பிறந்த சில மணிநேரங்களிலேயே மருத்துவர்களின் கவன குறைவால் உதிரப்போக்கு அதிகம் ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட41வது வார்டு ராகவேந்திரா நகர் முள்ளி குட்டை தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். வயது 34. இவர் பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்துவிட்டு வெளிநாட்டில் கேட்டரிங் தொழில் செய்துவிட்டு வெக்கேஷனல் லீவுக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடைய மனைவி குறளரசி, வயது 28.

பிஇ பட்டதாரி பெண்ணான குரளரசிக்கும், ஆனந்தனுக்கும் நான்கரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குறளரசி இரண்டாவது முறையாக கர்ப்பமுற்று நேற்று மாலை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக குழந்தைகள் நல பிரிவிற்கு தன் கணவருடன் வந்துள்ளார். குறளரசியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்‌.

அதற்கு தம்பதிகள் 26 ஆம் தேதி தான் டெலிவரி என ஏற்கனவே மருத்துவர்கள் கூறியிருந்தீர்கள். தற்பொழுது பிரசவ வலியே இல்லாத சூழ்நிலையில் ஏன் உடனே அட்மிஷன் போடுகிறீர்கள் என கேட்டுள்ளனர். இருப்பினும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று மாலை குறளரசி பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை சுமார் 2:30 மணி அளவில் குறளரசிக்கு சுகப்பிரசவம் செய்வதற்கு உண்டான வழிமுறைகளை மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

அதன்படி இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் குறளரசிக்கு 3 கிலோ 300 கிராம் எடையுள்ள ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்ததுள்ளது. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் குறளரசிக்கு உதிரப்போக்கு அதிகம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் கவன குறைவால் குறளரசியின் உதிரப்போக்கை உடனடியாக நிறுத்த முடியவில்லை . மேலும் குறளரசியின் நாடி துடிப்பும் மிகவும் கீழ் நிலைக்கு சென்று விட்டது.

நாடி துடிப்பு கீழ் நிலையில் உள்ள நிலையில் அவசர அவசரமாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து குறளரசியை செங்கல்பட்டு அரசு கல்லூரி மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மருத்துவர்கள் ஒரு பயிற்சி மருத்துவருடன் அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு அரசு கல்லூரி மருத்துவமனைக்கு குறளரசி சென்றவுடன் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இந்த பெண் இறந்துவிட்டார். ஏன் காஞ்சிபுரத்திலிருந்து இங்கே கொண்டு வந்தீர்கள் என கேட்டுள்ளனர்.

இதை கேட்ட குறளரசியின் கணவர் ஆனந்தன் அதிர்ச்சியுற்று செய்வதறியாது திகைத்தார். குறளரசி இறந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சியுற்றனர்.

இது தொடர்பாக நமது செய்தியாளர் குறளரசியின் உறவினர் தாட்சாயணியிடம் கேட்டபோது, குரளரசி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த பின்பு அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள செவிலிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு 26 ஆம் தேதி தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் ஏற்கனவே கூறி இருந்த நிலையில், நேற்று மதியம் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த குறளரசியை உடனடியாக அட்மிஷன் போட வேண்டிய காரணம் என்ன?

ஏற்கனவே குறளரசிக்கு வீசிங் பிரச்சனை உள்ளது என ஆரம்ப சுகாதார நிலைய தொடர் சிகிச்சை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் இதை ஏன் பிரசவ வார்ட்டில் உள்ள மருத்துவர்கள் கவனிக்கவில்லை .இதை கவனித்து இருந்தால் எங்கள் பெண் இறந்திருக்க மாட்டார் என உறவினர்கள் கதறினர் .

அது மட்டுமல்லாமல் குறளரசியின் நாடித் துடிப்பு மிகவும் கீழ்நிலைக்கு சென்று இங்கேயே இறந்து விட்டதாக கூறப்படுகின்ற நிலையில், அவரை ஏன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கருவுற்ற பெண்கள் நலமுடன் இருப்பதற்காக மத்திய அரசு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பிரசவ சமயத்தின் போது எந்த கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இறக்கக் கூடாது என பல்வேறு திட்டங்களை வகுத்த நிலையிலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவால் ஒரு இளம் பெண் இரண்டு குழந்தைகளை ஆதரவற்று விட்டுவிட்டு உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற இளம் தாய்மார்களின் மரணங்களும் பச்சிளம் குழந்தைகளின் மரணங்களும் சமீப காலமாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அதிகரித்து வருவதை மாவட்ட நிர்வாகமும், திமுக அரசும் சற்று கூட கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இறந்த குறளரசியின் சடலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று மாலை 6 மணி அளவில் வரை பிரேத பரிசோதனை செய்யாததால் உறவினர்கள் இடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி பதட்டமான சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 400

    0

    0