அரசு கொடுத்த வீட்டுமனையை அபகரிக்க முயற்சி… 4 குழந்தைகளுடன் சென்று பெண் கதறல்… எஸ்பியின் செயலால் நெகிழ்ந்த காவலர்கள்!!

Author: Babu Lakshmanan
13 April 2023, 10:49 am

வேலூர் மாவட்டத்தில் அரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் தனது குழந்தைகளுடன் சென்று எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

வேலூர் மாவட்டம் ராமாலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசி. இவரது கணவர் வேலாயுதம். வறுமையில் இருந்து வரும் இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராமாலைப் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் தற்போது ஓலை குடிசை அமைத்து அன்பரசியின் குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் உள்ள நபர் ஒருவர் அந்த இடத்திற்கு உரிமை கோருவதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அன்பரசி தனது 4 குழந்தைகளுடன் மனு அளிப்பதற்காக வந்திருந்தார்.

உடனடியாக எஸ்பி அலுவலக காவலர்கள் அந்த பெண்ணை எஸ்.பி ராஜேஷ் கண்ணனிடம் அழைத்துச் சென்றனர். மனுவைப் பெற்ற எஸ்பி ராஜேஷ் கண்ணன் அன்பரசியிடம் விசாரித்தார். அப்போது அந்த குழந்தைகள் யாரும் சாப்பிடவில்லை என தெரிவிக்கவே, உடனடியாக எஸ் பி ராஜேஷ் கண்ணன் காவலர்களுக்கு உணவு கொடுக்க அறிவுறுத்தியதன் பேரில் காவலர்கள் அன்பரசி மற்றும் அவரது குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்தனர்.

பின்னர், எஸ் பி ராஜேஷ் கண்ணன் பெண்ணின் மனு மீது உடனடியாக விசாரித்து. புகாருக்குள்ளான நபர் அன்பரசி மற்றும் அவரது குழந்தைகளுக்கு பிரச்சனை கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, அந்தப் பெண் நான்கு குழந்தைகளுடன் புறப்பட்டுச் சென்றார்.

பெண்ணின் வறுமையை உணர்ந்து மனுவை பெற்றவுடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது மட்டுமல்லாமல், அனைவருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்து மனிதம் காத்த எஸ்பியின் செயல் எஸ்பி அலுவலக காவலர்களிடையே பாராட்டைப் பெற்றது.

  • Second Wife Mounika talk About Balu Mahendra அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!