செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையில் தவறி விழுந்து பெண் பலி : ஒகேனக்கல் அருவிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த போது சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2022, 10:16 pm
தருமபுரி : ஒகேனக்கல் அருவியின் அருகே செல்பி எடுக்கும் பொழுது பாறையில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்ல் நீர்வீழ்ச்சி.
இங்குள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட இயற்கை அழகை கண்டு களிக்க தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலுருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதும், மற்றும் அங்குள்ள அருவிகளின் முன் செல்பி எடுப்பதும் வழக்கம்.
அதனடிப்படையில் தருமபுரி அடுத்த பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சுமதி (வயது 35) அவரது தாய் மற்றும் சகோதரிகளுடன் ஒகேனக்கலை சுற்றி பார்த்த விட்டு அங்குள்ள மெயின் அருவி முன் அருகே இருந்த பாறை மீது ஏறி செல்பி எடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அருவியின் அருகில் இருந்த பாறையின் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த பெண் செல்பி எடுத்து இறந்த சம்பவம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.