ஆட்டோவில் சென்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… ஓட்டுநர் மீதும் கொலைவெறி தாக்குதல் : பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்!!
Author: Babu Lakshmanan10 April 2023, 4:46 pm
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே ஆட்டோவில் சென்ற பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகராஜ் (33). இவர் இன்று அதிகாலை தனது ஆட்டோவில் வானரமுட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கட்டராங்குளத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளார். வானரமுட்டி – கட்டராங்குளம் இடையே காளம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து, ஆட்டோவில் இருந்த பெண்ணை வெட்டிப்படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க முயன்ற ஆட்டோ டிரைவர் சண்முகராஜை அந்த கும்பல் தலையில் தாக்கியதில் மயக்கம் அடைந்ததாக தெரிகிறது. மயக்கம் தெளிந்த பிறகு ஆட்டோ டிரைவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த ஆட்டோ டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண் கட்டராங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி வெள்ளைத்துரைச்சி(30) என்பது தெரிய வந்துள்ளது.