பெண்களிடம் நைசாக பழகி லோன் வாங்கி நூதன மோசடி… தலைமறைவான கில்லாடிப் பெண் ; பாதிக்கப்பட்ட பெண்கள் பரபரப்பு புகார்..!!
Author: Babu Lakshmanan30 December 2023, 11:47 am
கரூரில் நலிவடைந்த 500க்கும் மேற்பட்ட பெண்களை குறி வைத்து மைக்ரோ பைனான்ஸ்களில் லோன் வாங்கி நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வையாபுரி நகரில் வசித்தவர் மணிமேகலை (வயது 38). இவரது கணவர் சந்திரசேகர். இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். மணிமேகலை தங்கள் தெருவில் வசிக்கும் ஏழை மற்றும் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களிடம் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் லோன் வாங்குவதற்கான ஆவணங்களை பெற்று அவர்களுக்கு மைக்ரோ பைனான்ஸில் லோன் வாங்கி தந்து விடுவார்.
பிறகு அவர்களிடம் தன்னுடைய தேவைக்கு உன்னுடைய பெயரிலேயே வாங்கிக் கொள்கிறேன், லோன் நான் கட்டி விடுகிறேன் என நம்ப வைத்து வேறு சில மைக்ரோ பைனான்ஸ்களில் லோன் வாங்கி கொள்வாராம் மணிமேகலை.
இது போன்று வையாபுரி நகர், அண்ணா நகர், காமராஜ் நகர், எல்.ஜி.பி நகர் என மாநகரின் பல்வேறு இடங்களிலும், மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் வசிக்கும் பெண்களுக்கு லோன் வாங்கி கொடுத்தும், தனக்கும் அவர்கள் மூலம் லோன் வாங்கியுள்ளார். எக்யுட்டாஸ், அரைஸ், முத்தூட், எல்&டி, மகளிர் பெடரல் பேங்க், கிராம விடியல் என பல மைக்ரோ பைனான்ஸ்களில் அதன் முகவர்கள் மூலம் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து லோன்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.
35 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடனாக சுமார் 500 பேருக்கு வாங்கி கொடுத்துள்ளார். இதனை 24 மாதத்திற்குள் வாரமாகவோ, மாதமாகவோ திருப்பி செலுத்த வேண்டும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமேகலை தான் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மணிமேகலை தலைமறைவாகி விட்டதால் லோன் எடுத்த பெண்களிடம் அந்த அந்த மைக்ரோ பைன்னான்ஸ் பணியாளர்கள் கண்ட நேரங்களில் போன் செய்வதும், ஆபாசமாக திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
நாங்கள் எங்களுக்காக பெற்ற கடனை முறையாக செலுத்தி வரும் நிலையில், தலைமறைவான மணிமேகலைக்கு வாங்கிக் கொடுத்த கடனையும் எங்களை கட்டச் சொல்லி மிரட்டுவதாகவும், அவர்களிடமிருந்து எங்களை பாதுகாப்பதுடன், தலைமறைவான மணிமேகலையை கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.