பேசிக் கொண்டிருந்த சபாநாயகர் அப்பாவு… திடீரென கூட்டத்தில் இருந்த பெண் தீக்குளிக்க முயற்சி ; அரசு நிகழ்ச்சியில் பதற்றம்..!!
Author: Babu Lakshmanan4 September 2023, 4:27 pm
நெல்லை அரசு நிகழ்ச்சியில் சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர் வாகனங்களை வழங்கிவிட்டு செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டு இருந்தார். அப்போது, திடீரென சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண் எதிரே மைதானத்தில் பெண் ஒருவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதை கவனித்த அலுவலர்கள் மற்றும் போலீசார் ஓடிச்சென்று அந்த பெண்ணை தடுத்து தற்கொலையிலிருந்து மீட்டனர். பின்னர், ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணையில் அவர் பாளையங்கோட்டை எம்கேபி நகரை சேர்ந்த வேளாங்கண்ணி என்பதும், கந்து வட்டி கொடுமை காரணமாக அவர் தீக்குளிக்க முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எம்கேபி நகரை சேர்ந்த கிளாடிஸ் என்பவரிடம் வேளாங்கண்ணி குடும்ப தேவைக்காக பத்தாயிரம் ரூபாய் கடனாக கேட்டதற்கு. கிளாடிஸ் 8000 ரூபாய் கொடுத்துவிட்டு வாரந்தோறும் 1100 என பத்து வாரங்கள் மொத்தம் 11,000 ஆயிரம் தர வேண்டும் என கூறியுள்ளார். அதன் பெயரில் ஏழு தவணைகளாக 1100 ரூபாய் பணத்தை வேளாங்கண்ணி கொடுத்துள்ளார். மீதமுள்ள மூன்று தவணைகளை கொடுக்க முடியாமல் திணறியுள்ளார்.
எனவே, கிளாடிஸ் மற்றும் அவரது உறவினர் சுரேஷ் இருவரும் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள வேளாங்கண்ணி கடைக்கு சென்று, தனது கடனை தராவிட்டால் கடை நடத்த முடியாது, உன் குழந்தைகளை ஒழுங்காக வாழ விட மாட்டேன், என்று ஆபாசமாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக வேளாங்கண்ணி, முதல்வர் தனிப்பிரிவு மற்றும் தென்மண்டல ஐஜிக்கு அளித்த புகாரை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், கிளாடீஸ் மற்றும் சுரேஷின் நெருங்கிய நண்பர்களான பாளையங்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்த ஹேலினாவிடம் தனது கணரின் மருத்துவ செலவுக்காக 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். அதற்கு 15 தினங்களுக்கு ஒரு முறை ஆயிரம் ரூபாய் வட்டியாக செலுத்தி வந்துள்ளார். மேலும் இந்த கடனுக்காக வேளாங்கண்ணி ஹேலினாவிடம் தனது வங்கி காசோலைகளை கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் கிளாடீஸ் மற்றும் சுரேஷ் ஆகியோர் வேளாங்கண்ணியின் காசோலைகளை ஹேலினாவிடமிருந்து பெற்று வங்கியில் பணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதை அறிந்த வேளாங்கண்ணி ஹேலினாவிடம் தனது காசோலைகளை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், தற்போது வரை காசோலைகள் திருப்பிக் கொடுக்காமல், ஹேலினா மற்றும் கிளாடிஸ் இருவரும் வேளாங்கண்ணியிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவுக்கு சென்றதாகவும் வேளாங்கண்ணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு நிகழ்ச்சியில் சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே கந்துவட்டி கொடுமை காரணமாக பெண் ஒருவர் தீக்குளிக்கும் சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.