‘புகார் கொடுக்கப் போனால் போலீஸ்காரங்க மிரட்டுறாங்க’… அம்பேத்கர் சிலை முன்பு தாய், மகள் தீக்குளிக்க முயற்சி..!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 4:37 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் மிரட்டுவதாக கூறி வடகரை அம்பேத்கர் சிலை முன்பு தாய், மகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சண்முகநாதன் என்பவரது மனைவி துளசி (35). இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை உள்ளது. அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

எனவே, இவர்களது வீட்டிற்கு முன்பு செல்லக்கூடிய மின்சார வயர் தாழ்வாக செல்வதால் அருகில் உள்ள மரத்தின் மீது உரசி அவ்வப்போது மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால், மின்வாரிய ஊழியர்களிடம் சண்முகநாதன் மற்றும் அவரது மனைவி துளசி ஆகியோர் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்களான லூக்காஸ், குமார் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்வீர்களா..? என்று கூறி சண்முகநாதன் என்பவரை தாக்கியுள்ளனர். இதில், காயம் அடைந்த சண்முகநாதன் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், சண்முகநாதனின் மனைவி துளசி, லூக்காஸ் மற்றும் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதேபோன்று, லூகாஸ் மற்றும் குமார் ஆகியோர் தரப்பினரும் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருதரப்பினரையும் தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

துளசி என்பவரது உறவினரான சிறுவன் ஒருவர் பெயரிலும் சேர்த்து வழக்கு பதிவு செய்வோம் என்று கூறி தென்கரை காவல்துறையினர் மிரட்டியதாக கூறுகின்றனர். இந்த நிலையில், இன்று காலை சுமார் 8 மணி அளவில் பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன்பு துளசி மற்றும் அவர்களது மகள் ஆகிய இருவரும் தென்கரை காவல்துறையினர், ஒருதலை பட்சமாக பேசி மிரட்டுவதாக கூறி, மண்ணெண்ணெய் கேனை கையில் வைத்து தனக்குத் தானே ஊற்றி தீக்குளிக்க முற்பட்டனர்.

இந்த தகவல் அறிந்த பெரியகுளம் வடகரை காவல்துறையினர் துளசியிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, தாய், மகள் இருவர் மீதும் தண்ணீர் ஊற்றி பெரியகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 614

    0

    0