’விஜய பார்க்கனும்’.. 4வது மாடியில் நின்று மிரட்டல்.. காவலர் காயம்.. சென்னையில் பரபரப்பு!
Author: Hariharasudhan3 February 2025, 6:56 pm
சென்னையில், தியேட்டரின் 4வது மாடியில் நின்றுகொண்டு விஜயைப் பார்க்க வேண்டும் எனக் கூறிய பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை அடுத்த சூலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் சிவானந்தம் – கீதா (31) தம்பதி. சிவானந்தம், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இதனால் கீதா, தனது 9 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று தனது தந்தையுடன் கீதா ஆட்டோவில் வெளியே சென்றுள்ளார். அந்த வகையில், தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, கீதா, திடீரென ஆட்டோவில் இருந்து இறங்கி, அருகில் உள்ள தனியார் தியேட்டருக்குள் வேகமாக ஓடியுள்ளார்.
தொடர்ந்து, யாரும் பிடிக்க முடியாத வகையில் மிக வேகமாக ஏறி, அந்த தியேட்டரின் 4வது மாடிக்குச் சென்றுள்ளார். பின்னர், “நடிகர் விஜயைப் பார்க்க வேண்டும்” என்று கூறி கூச்சலிட்டுள்ளார். மேலும், அங்கிருந்து கீழே குதிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் தியேட்டர் ஊழியர்கள், படம் பார்க்க வந்தவர்கள், பொதுமக்கள் பதற்றமான நிலையில், தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது, பெண் இன்ஸ்பெக்டர் சஜிதா, மாடிக்கேச் சென்று கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் தத்தளித்த மகன்.. பதறிய தாயுடன் 3 பேர் பலியான சோகம்!
தொடர்ந்து, கீதாவை அவர் சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். பின்னர், மாடியில் உள்ள படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்த கீதா, திடீரென ஆவேசமாகியது மட்டுமல்லாமல், இன்ஸ்பெக்டர் சஜிதாவை படியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், சஜிதாவிற்கு வலது கையில் எலும்பு முறிந்துள்ளது.
பின்னர், அங்கிருந்த சக போலீசார், இன்ஸ்பெக்டரை தண்டையார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இதனிடையே, கீதாவையும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.