மகளிர் தினத்தையொட்டி ஒருநாள் காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் கல்லூரி மாணவி : புதுச்சேரியில் நெகிழ்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
8 March 2022, 11:15 am

புதுச்சேரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவி ஒரு நாள் காவல் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி காவல்துறை சார்பில் பாரதிதாசன் அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவி நிவேதா இன்று ஒருநாள் முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரியாக பணியாற்றுகிறார்.

NCC மாணவியான இவர் NCC உடையில் முத்தியால்பேட்டை காவல்நிலையம் வந்தவரை, முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் பூங்கோத்து கொடுத்து வரவேற்று, காவல்நிலைய அதிகாரி இருக்கையில் அமரவைத்தனர்.

பின்னர் காவலர்களுக்கான ரோல் காலில் பங்கேற்று இன்றைய காவல்த்துறை பணிகள் என்ன என்பதை கேட்டறிந்தார். தொடர்ந்து காவல்நிலையத்தில் உள்ள அறைகளை பார்வையிட்டார். இதனை அடுத்து காவல்நிலையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், காவல்துறை வாகனத்தில் ஏறி புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்நிலையதிற்குட்பட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.

மகளிர் தினத்ததன்று தன்னை ஒருநாள் போலீஸ் அதிகாரியாக நியமித்த புதுச்சேரி காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், இதனை பெருமையாக கருதுவதாகவும் தெரிவித்த அவர், இன்று முழுவதும் போலீஸாக பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என கல்லூரி மாணவி நிவேதா தெரிவித்தார்.

இதேபோல, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற நடைபயணத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

இந்த நடைபயண நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன், கிழக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபிகா கொடியசைத்து தொடக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடற்கரை காந்தி சிலையில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு 5 கி.மீட்டர் சுற்றி மீண்டும் காந்தி சிலைக்கு வந்தடைந்தனர்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று புதுச்சேரியில் பல்வேறு நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!