இட்லி கடையும்… இடைவிடாத தன்னம்பிக்கையும்.. தள்ளாடும் வயதிலும் தளராத 80 வயது பாட்டி; மகளிர் தின ஸ்பெஷல்…!!

Author: Babu Lakshmanan
8 March 2023, 4:05 pm

யாரையும் எதிர்பாராமல் சிறிய உணவகத்தை நடத்தி தன் சொந்த காலில் நிற்கும் 80 வயது பாட்டி குறித்த செய்தி தொகுப்பு…

நாம் பெண்களின் சாதனைகளையும், வெற்றிகளையும் மகளிர் தினமாக கொண்டாடும் வேளையில், 80 வயதிலும் சுயதொழில் செய்து உழைத்து வருகிறார் நெல்லை ஜெயா பாட்டி. ஜெயாப்பாட்டியின் கணவரும், மகன், மகள் இறந்து விட, திருமணம் செய்து கொடுத்து விட்டு யாரும் இல்லாமல் கடந்த 30 வருடங்களாக தனிமரமாய் வாழ்ந்து வருகிறார்.

எந்த நிலையிலும் அவர் துவண்டு விடவில்லை. வாழ்க்கையை ஒரு வாட்டி வாழ்ந்து பார்த்து விடலாம் என தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும் பம்பரமாய் சுழன்று நெல்லை சந்திப்பு அருகில உடையார்பட்டியில் ஜெயா பாட்டி இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதில் வரும் வருமானம் பெரிய அளவில் இல்லையென்றாலும், அவர் யாரிடமும் கையேந்தாமல் தன்னை தானே காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார்.

இவ்வாறு எந்த நிலையிலும் எத்தகைய கடினமாக சூழலின் போது பெண்கள் தங்களுடைய தன்னம்பிக்கையையும் கைவிட கூடாது என தெரிவிக்கிறார் ஜெயா பாட்டி. வேதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் பெண்களுக்கு மகளிர் தினத்தின் அதே வேளையில் 80 வயதிலும் உழைத்து கொண்டிருக்கும் ஜெயா பாட்டி தன்னம்பிக்கை ஒரு உதாரணம்.

இது குறித்து பாட்டி ஜெயா கூறுகையில்:- என்னுடைய கணவர் இறந்தவுடன் அவரிடம் படித்த தொழிலையே செய்து என்னுடைய மகளையும் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். வயதாகி விட்டது என்று மகளிடமும், உறவினர்களிடமும் உதவி கேட்க மனம் இல்லாமல் உடலில் தெம்பு இருக்கும் வரை உழைத்து சாப்பிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இட்லி கடையை நடத்தி வருகிறேன். ஒரு நாளைக்கு 500 ரூபாய் வியாபாரம் இருக்கும். சில நாட்களில் 200 ரூபாய்க்கு வியாபாரம் இருக்கும் என்றாலும், அதை வைத்து நான் சமாளித்து வருகிறேன். அருகில் உள்ளவர்கள் எனக்கு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது போன்ற சிறு உதவிகள் செய்து வருகின்றனர்.

வீடு, கடை வாடகைக்கு தான் இருக்கிறேன். கடை வைத்திருப்பதால் முதியோர் அல்லது கணவனை இழந்தவர்களுக்கான உதவித்தொகை எனக்கு கிடைக்கவில்லை. உதவி தொகை கிடைத்து இருந்தால் உடல் நலம் சரியில்லாது போனால் உதவித்தொகையை வைத்து பயன் பெற்று இருப்பேன். ஆனால், அதற்கு எனக்கு அரசு உதவி செய்யவில்லை. அந்த உதவித்தொகையை பெற்று தருவதற்கு எனக்கு யாரும் இல்லை என்ற வருத்தம் தான் மிஞ்சுகிறது.

மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். பெண்களுக்காக நான் கூறுவது தாய், தந்தை பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் ஏதாவது ஒரு கைத்தொழில் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். அது பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், கஷ்ட காலத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த வயதிலும் யாரிடமும் யாசகம் கேட்காமல் உழைத்து சாப்பிடும் இந்த பாட்டியின் கடைக்கு சென்று இட்லி சாப்பிட்டு காசு கொடுத்தாலே அவருக்கு நாம் செய்த பெரிய உதவியாக இருக்கும்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 567

    0

    0