குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு.. மீண்டும் அரசு மருத்துவமனையின் அவலம்!
Author: Hariharasudhan19 November 2024, 6:02 pm
சேலம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்ட பெண் மரணம் அடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்: சேலம் வாழப்பாடி அடுத்த பனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் – செல்லம் தம்பதி. இதில், முருகன் லாரி ஓட்டுனராக உள்ளார். இந்த தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஐந்தாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார் செல்லம். இதனை அடுத்து, நிறைமாத கர்ப்பிணியான செல்லம், பிரசவத்திற்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, கடந்த நவம்பர் 14ஆம் தேதி செல்லம்-க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து, இந்த மருத்துவமனையிலேயே அவர் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்து உள்ளார். இதன் பேரில், அவருக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று செல்லத்தின் உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து, சேலம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உட்பட உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது குறித்து அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம்.. தீக்குளிக்கவும் தயார் : திமுக அரசுக்கு மக்கள் எச்சரிக்கை!
இருப்பினும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர். மேலும், கடந்த ஒரு வார காலமாக அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது தாய் மற்றும் சேய் உயிரிழப்பு தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.