மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத விரக்தி… வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டம்…!!
Author: Babu Lakshmanan2 November 2023, 4:47 pm
திருவாரூர் ; மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத விரக்தியில் வலங்கைமானில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, மேல்முறையீடு செய்தும், இதுவரை அதற்கான முடிவு தெரியவில்லை எனக் கூறி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து 25க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில் பத்து எருத்துக்காரத் தெரு, நடுத்தெரு, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும், இதற்காக பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அலைய வேண்டி உள்ளதாகவும் கூறி, 14வது வார்டு கவுன்சிலர் செல்வராணி தலைமையில் இந்த பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து விளக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.