அரசு பள்ளியில் வேலை செய்வதே ஒரு சாபக்கேடு : கண்ணீர் விட்டு அழுது புலம்பிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை..!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2022, 5:56 pm

நாடு முழுவதும் கடந்த 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. காந்தி பிறந்தநாளையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இதில் ஒவ்வொரு கிராமங்களில் இருக்கும் குறைகள், கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சாலமரத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடந்தது.

இதில் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பு வகித்து வரும் மதியழகன் பேசுகையில் சாலமரத்துப்பட்டி பஞ்சாயத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. தெரு விளக்குகள் அமைப்பதற்கு கூட யாரும் அக்கறை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

இவரை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் ஓலைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சக்தி என்பவர் கலந்து கொண்டார். அவர் தரப்பு குறைகளை கூறினார்.

அவர் பேசும் போது, எங்கள் பள்ளியில் எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை 95 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். எங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு போதிய கட்டட வசதி இல்லை.

இதனால் மழை காலங்களிலும் வெயில் காலங்களிலும் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பல முறை அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.

இது போன்று எந்த ஒருவித அடிப்படை வசதியும் இல்லாத பள்ளியில் ஆசிரியராக பணி செய்வது அரசு பள்ளி ஆசிரியரின் சாபக்கேடு. இதற்கு பதிலாக விருப்ப ஓய்வு பெற்றுச் சென்றுவிடலாம் என கண்ணீர் மல்க பேசினார்.

அரசு பள்ளி ஆசிரியை அரசுக்கு எதிராக பேசியும் இந்த அரசாங்கத்தில் வேலை செய்வதே சாபக்கேடு என்றும் கண்ணீருடன் தனது மனுவை கிராம சபை கூட்டத் தலைவரிடம் கொடுத்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் கேட்ட போது இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

  • raakayi teaser update தனுஷ் வழியில் நயன்தாரா..புதிய படத்தின் அப்டேட் வெளியீடு..!
  • Views: - 801

    0

    0