பரோட்டாவில் கிடந்த புழு… வழக்கறிஞர் போட்ட திடீர் போன் கால்… திமுக பிரமுகரின் உணவகத்திற்கு அபராதம் விதித்து அதிரடி

Author: Babu Lakshmanan
21 January 2023, 12:35 pm

காஞ்சிபுரத்தில் திமுக பிரமுகரின் பிரபல உணவகத்தில் சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவரின் உணவில் புழு இருந்ததால் விற்பனைக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நோட்டீஸ் விநியோகித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே திமுக கட்சியின் முக்கியஸ்தரின் பிரபல சைவ உணவகம் செயல்பட்டு வருகின்றது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்ட ஸ்ரீ சரவண பாலா என்ற இந்த ஓட்டல் இன்றைய சூழ்நிலையில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் நகரில் பெரிய செல்வந்தரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட பொது செயலாளரும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திமுக கட்சிக்கு தாவியருமான எஸ்எல்என்எஸ். விஜயகுமார் என்பவரின் கட்டுப்பாட்டில் இந்த ஓட்டல் இயங்கி வருகின்றது.

காஞ்சிபுரம் நகரில் மிக முக்கியமான பகுதியில் உள்ள இந்த பிரபலமான உணவகத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் நேற்று மாலை இந்த உணவகத்தில் உணவருந்தியுள்ளார்.

சுரேஷ் சாப்பிட்டு கொண்டு இருந்த பரோட்டாவில் சுமார் அரை இன்ச் அளவு நீளமுள்ள புழு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். இது தொடர்பாக உணவகத்தின் மேலாளரிடம் புகார் கூறிய போது, அவர்கள் சரியான ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என வேதனைப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா அவர்களுக்கு தகவல் அளித்தார். தகவல் அளித்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து தான் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உணவகத்துக்கு வந்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஸ்ரீ சரவண பாலா உணவகத்தில் ஆய்வு செய்தனர். அதில், உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இல்லை, சூடான உணவு பொருட்களை தடை செய்யப்பட்ட பாலித்தீன் பையில் வைக்கப்பட்டுள்ளது, பூச்சிகள் புழுக்கள் வராமல் இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை, குளிர்சாதன பெட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது பல விதமான சுகாதார குறைபாடுகளை கண்டறிந்தனர். வழக்கறிஞர் சுரேஷ்க்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததையும் கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 26, 27 ,31, 36, 56 மற்றும் 55 கீழ் ஸ்ரீ பாலா உணவகத்தில் உணவு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும், உணவகத்தில் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய காரணத்தினால் 2000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட குறைபாடுகளை நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஏழு நாட்களுக்குள் நிவர்த்தி செய்து அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அதுவரை உணவு விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், தவறினால் ஓட்டலுக்கு சீல் வைக்கப்படும் எனவும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் அனுராதா அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் திமுக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் மிகப் பிரபலமான உணவகத்துக்கு உணவு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நகரில் மிகுந்த பரப்பரப்பை உண்டாக்கியுள்ளது.

உணவு பாதுகாப்புத் துறையில் போதிய அலுவலர்கள் இல்லாததால், சுமார் ஒரு வருட காலமாக எந்த உணவகத்திலும் சென்று இவர்கள் ஆய்வு செய்வதில்லை. பணியில் இருக்கும் சில அலுவலர்களும் உணவகத்தின் உரிமையாளரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நற்சான்றுகள் வழங்குவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக தான் கடந்த ஒரு வருடமாக பல்வேறு உணவகங்களில் ஸ்டாப்ளர் பின், ரப்பர் பேண்ட், கரப்பான்பூச்சி, அட்டைப்பூச்சி, புழுக்கள் போன்ற சுகாதார குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 483

    0

    0