அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ‘யாத்ரி நிவாஸ்’ 18 மாதங்களுக்குப் பிறகு திறப்பு; பராமரிப்பு பணியில் மெத்தனம்.. பக்தர்கள் முகம் சுளிப்பு!!

Author: Babu Lakshmanan
27 December 2022, 8:44 am

கோயில் நகரம் எனப்படும் காஞ்சிபுரத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக பார்க்கிங் வசதியுடன் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட யாத்ரி நிவாஸ் கட்டிடம் சுற்றுலா மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

தென்னிந்தியாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாகவும், நகரங்களில் சிறந்ததாகவும் சங்க காலத்தில் நகரேஷூ காஞ்சி என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரத்திற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

பெரிய காஞ்சிபுரம் லாலாகுட்டை பகுதியில், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 4.5 ஏக்கர் பரப்பளவில் இரண்டு கோடி ரூபாய் செலவில் வாகனம் நிறுத்தும் பணி கடந்த அதிமுக ஆட்சியில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு சுமார் 18 மாதங்களாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.

இதன் ஒரு பகுதியில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் தங்கும் விடுதியான யாத்திரி நிவாஸ்’ கட்டடமும், அதன் அருகில், பக்தர்களின் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு , சுற்றுலா துறை, கோவில் நிர்வாகம் இடையே யார் இவற்றை பராமரிப்பது என முடிவு எட்டப்படாமல் இருந்தது. கடைசியாக சுற்றுலா துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம், இதன் பராமரிப்பு பணியை மேற்கொள்ள இருப்பதாக, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வாகனம் நிறுத்துமிடம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த வாகன நிறுத்தும் இடத்தில் சுமார் 350 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இதற்காக ஒரு பேருந்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்னூறு ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இவ்வளவு பணம் வசூலிக்கும் இந்த இடத்தில் சுற்றுலா துறையினரோ, ஏகாம்பரநாதர் கோவிலின் அலுவலகர்களோ எந்த விதமான பராமரிப்பு பணியும் செய்யாத காரணத்தினால், லேசாக பெய்த மழைக்கே ஹாலோ பிளாக் பதிக்கப்பட்ட இந்த இடம் முழுவதும் குளம் போல தண்ணீர் தேங்கி நீர்‌ வெளியேற வழியில்லாமல் சேரும் சகதியமாக காணப்படுகிறது.

பல மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் இந்த சேற்றில் காலை வைத்து வழுக்கி விழுகின்றனர். அதேபோல், கழிவறை திறந்து விடப்படாததால் பேருந்தில் வருகின்ற பயணிகள் ஆங்காங்கே சிறுநீர் கழிக்கும் சூழ்நிலையம் ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், இங்கு குப்பைத் தொட்டிகள் எதுவும் வைக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் உணவு அருந்தி விட்டு இலைகளையும் பிளாஸ்டிக் பேப்பர்களையும் அங்கேயே தூக்கி எறிகின்றனர். இதனால் அந்த இடம் முழுவதும் குப்பை கூளங்கள் சேர்ந்து தண்ணீர் வெளியேறும் பாதைகளை அடைத்து கொள்வதால் கால்வாயில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, சுகாதாரமற்ற சூழ்நிலை உண்டாகுகின்றது. அதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் அச்சம் உள்ளது, என வெளிமாநில பயணிகள் அச்சப்படுகின்றனர்.

எப்போதும் போல் சுற்றுலாத் துறையினர் மெத்தனத்தை கடைப்பிடிக்காமல், வாகன நிறுத்தம் இடத்தின் பராமரிப்புகளை நன்றாக செய்தால்தான் வெளிமாநில பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் காஞ்சி மாநகரின் பெருமைகளை நன்றாக பேச முடியும் என்பதை சுற்றுலா துறையினர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

  • Dhanush accused of troubling Keerthy Suresh கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
  • Views: - 506

    0

    0