விருப்பம் இல்லாவிட்டாலும் பாஜகவுக்காக நாங்கள் அதை செய்தோம் : கே.பி.முனுசாமி ஓபன் டாக்!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2023, 1:45 pm
நாங்கள் விரல் காட்டியதால்தான் நீங்கள் எம்எல்ஏ ஆனீர்கள் : பாஜக மீது கே.பி முனுசாமி அட்டாக்!!
கிருஷ்ணகிரி அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே பி முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி நம்பகத்தன்மையற்ற நபர் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்த கருத்து பதில் அளித்த அவர் நம்பிக்கை துரோகி என ஒருவரை அடையாளம் காட்டும் பொழுது பண்ருட்டி ராமச்சந்திரனை காட்டும் வகையில் தான் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ் என சென்ற இடங்களில் எங்கும் விசுவாசமாக இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கு பேர் போன பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை துரோகி உடன் அமர்ந்து கொண்டு அவரை நம்பிக்கைக்கு உரியவர் என கூறுகிறார்.
அதிமுகவை கபலிகரம் செய்த சசிகலா இந்த இயக்கத்தில் இருக்கக் கூடாது என நான் போராடினேன் அந்த சமயம் தர்மயுத்தம் செய்கிறேன் என என்னுடன் வந்து சசிகலாவை விமர்சனம் செய்தவர் ஓபிஎஸ்.
தற்பொழுது கால சூழல் மாறியவுடன் சசிகலாவை தலைவியாக ஏற்றுக் கொள்ள முயற்சி செய்கிறார். தன்னுடைய சுய லாபத்திற்கு கொள்கையை விற்று ஆதாயம் தேடும் இரு தலைவர்கள் ஒன்றாக சேர்ந்துள்ளனர் என விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டுமென பாஜக கோரிக்கை வைத்ததாக முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் பேசிய கருத்துக்கு பதில் அளித்த கே பி முனுசாமி தீர்மானம் நிறைவேற்றி என்ன காரணத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம் என அனைவருக்கும் தெரியும்.
சில நேரங்களில் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் திரும்பத் திரும்ப வரும் பொழுது அந்த கருத்துகள் மனதில் பதிந்து மேடையில் உண்மை நிலை மறந்து இவ்வாறு கருத்துக்களை சொல்வது இயல்பு. கருப்பண்ணன் அவ்வாறு தான் பேசி இருக்கிறார். 2026 இல் ஆட்சிக் கட்டிலில் வரவேண்டும் என்பது தான் அதிமுகவின் இலக்கு இதில் பாஜக எங்கு வருகிறது என கேள்வி எழுப்பினார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை மக்கள் எந்த அளவில் ஏற்றுக் கொள்கிறார்கள் என அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். எச் ராஜா கண்மூடித்தனமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுகிறார். நாங்கள் விரல் காட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் தான் நீங்கள்.
2024 தேர்தலில் அதிமுக மக்களிடத்தில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது தெரியும். அதிமுகவை நாங்கள் காப்பாற்றினோம் என தெரிவிக்கிறார்கள். ஆனால் நாங்கள் தான் அவர்களை காப்பாற்றினோம்.
நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்கள் வந்த பொழுது எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட உறவின் அடிப்படையில் பொதுச் செயலாளர் ஆதரவு தெரிவிக்க சொன்னார்.
அந்த அடிப்படையில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற ஆதரவளித்துள்ளோம் என்பதை ஆட்சியாளர்களுக்கும் எச் ராஜாவுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் கர்நாடகம் மட்டுமல்லாமல் கேரளா புதுச்சேரி மாநிலத்தினுடைய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அந்தக் கூட்டத்தின் தலைவர் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கிறார்.
கர்நாடகாவின் பிரதிநிதிகள் இருந்த கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு கர்நாடகாவின் முதல்வர் நீதிமன்றத்திற்கு செல்வது முறையற்ற செயல். அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறி இறையாண்மைக்கு எதிராக செல்கிறார் என பொருள்.
அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மாநிலங்கள் இடையே உறவை பாதுகாத்து உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு வழங்கக்கூடிய உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பாக செயல்பட வேண்டும் என பேசினார்.