மணலை கயிறாக்க முடியாது… அண்ணாமலை சொன்ன அதிரடி கருத்து : திருமாவளவன் பரபர ரியாக்ஷன்!!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2023, 7:03 pm

மணலை கயிறாக்க முடியாது… அண்ணாமலை சொன்ன அதிரடி கருத்து : திருமாவளவன் பரபர ரியாக்ஷன்!!!!

கடந்த 8ம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரையில் பேசிய அண்ணாமலை, சனாதனத்தை தமிழகத்தில் உயா்த்திப் பிடிக்கும் ஒரே கட்சி பாஜகதான்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது. அதேபோல கோயிலுக்கு முன் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் சிலை அகற்றப்படும்.

‘கடவுளை நம்புபவன் முட்டாள்’ என சொல்லியவரின் சிலைகள் (பெரியார் சிலைகள்) அகற்றப்படும். அதற்கு பதிலாக ஆழ்வார்கள் நாயன்மார்கள், தமிழ் புலவர்கள், திருவள்ளுவர் சிலை அங்கு வைக்கப்படும் என்று பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு அலை எழுந்தது.

இந்நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பியும் விமர்சனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் டிசம்பர் 23ம் தேதி தேசம் காப்போம் மாநாட்டை விசிக நடத்துகிறது.

இதற்கான இடத்தை தேர்வு செய்ய இன்று திருமாவளவன் திருச்சி வந்திருந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாமலையின் கருத்துகளுக்கு விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வெண்டும்.

தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துகிறது. அவர்களால் கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா? எனவே மாநாடுக்கு அனுமதி கிடைக்கும். தமிழகத்தில் பாஜக கட்சியின் கூட்டங்களுக்கு ஒரு சதவீதம் கூட ஆட்கள் வருவதில்லை.

அதுதான் யதார்த்தமான உண்மை. அவர்கள் கூட்டணி கட்சியிடமும், சாதி அமைப்பினரும் ஆள் பிடிக்கிறார்கள். பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியது, மணலை கயிறாக திரிப்போம், வானத்தை வில்லாக வளைப்போம் என்று சொல்லுகிற கூற்றைப் போல் இது இருக்கிறது.

அவரால் பெரியார் சிலை அகற்றவும் முடியாது, மணலை கயிறாக திரிக்கவும் முடியாது. இது பரபரப்புக்காக பேசும் பேச்சாகும். தமிழகத்தில் இதெல்லாம் எடுபடாது என தெரியும். நாடாளுமன்ற தேர்தல் வரை இவரது பேச்சை கேட்டுதான் ஆக வேண்டும். அதன் பிறகு அக்கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 345

    0

    0