கோவை TO திருச்சூர் சைக்கிளில் சென்று சாதனை: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்த இளைஞர்..!!
Author: Rajesh24 February 2022, 3:53 pm
கோவை: கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக கோவை-திருச்சூருக்கு 2.55 மணிநேரத்தில் 100 கி.மீ. சைக்கிளில் சென்று இளைஞர் ஒருவர் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஜி.டி.விஷ்ணுராம், மக்களின் நலன் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன் இரண்டு முறை கார் மற்றும் சைக்கிளில் நீண்ட தூரம் குறுகிய நேரத்தில் பயணம் செய்து சாதனை புத்தங்களில் இடம் பிடித்தார்.
தனது சாதனையில் மூன்றாவது கட்ட முயற்சியாக கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கோவை-திருச்சூர் வரை 100 கி.மீட்டர் தூரத்தை 2.55 மணி நேரத்தில் சைக்கிள் மூலம் செல்ல தீர்மானித்தார்.
அதன்படி நேற்று பகல் 2.22 மணிக்கு கோவை-பாலகாடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் தொடங்கினார். பயணத்தை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி மற்றும் அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் கலந்துகொண்டனர். கோவையில் இருந்து 100 கி.மீ இலக்கை 2.55 மணி நேரத்தில் கடந்து திருச்சூரில் நிறைவு செய்தார்.
அவரை திருச்சூர் மாநகர போலீஸ் ஆதித்யா ஐபிஎஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்று பாராட்டினார். விஷ்ணுராம் மேற்கொண்ட சைக்கிளிங் பயணத்தை இண்டியா புக்ஆப் ரிகார்ட் நடுவர் ஹரிஷ் பின் தொடர்ந்து உறுதி செய்ததுடன், குறிப்பிட்ட நேரத்தில் பயணம் முடிந்ததை பாராட்டி, வரும் 2023ம் ஆண்டில் வெளியாகும் இண்டியா புக்ஆப் ரிகார்ட்டில் பதிவு செய்வதற்காக சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இது குறித்து விஷ்ணுராம் கூறுகையில், “மக்கள் ஒவ்வொருவரும் தற்போதைய நெருக்கடியான வாழ்வில் தங்கள் உடல் நலத்தை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். பாதிப்பு தனிப்பட்ட நபரை மட்டுமில்லாமல், குடும்பத்தையே பாதிக்கும். இதை தவிர்த்து ஒவ்வொருவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும் என்ற லட்சிய நோக்கத்தில் நான் விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறேன்.” என்றார்