மேல்மருத்துவத்தூர் செல்லும்போது மின்சாரம் பாய்ந்து இளம் பக்தை பலி.. ஆற்காடு அருகே சோகம்!
Author: Hariharasudhan21 December 2024, 11:58 am
மேல்மருவத்தூர் சென்ற பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்டோர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு, மாலை அணிவித்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இதன்படி, அவர்கள் சுற்றுலா பேருந்து ஒன்றை அமைத்து உள்ளனர்.
இதன்படி, இவர்கள் அனைவரும் அந்த சுற்றுலா வேனில் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு உள்ளனர். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள முப்பதுவெட்டி பகுதியில் தேநீர் அருந்துவற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்தி உள்ளார்.
பின்னர், பேருந்தை ரிவர்ஸ் எடுத்து உள்ளார். அப்போது, அங்கு தாழ்வாக இருந்த மின்சாரக் கம்பி பேருந்தின் டாப் மீது உரசியதில், பேருந்தில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இந்த நேரத்தில், பேருந்தில் பயணித்து வந்த அகல்யா (20) என்ற இளம்பெண், பேருந்தின் கம்பியைப் பிடித்து உள்ளார்.
இதனால் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலே சரிந்து விழுந்து உள்ளார். இதனையடுத்து, அகல்யாவை மீட்ட உடன் வந்தவர்கள், அவரை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால், அகல்யா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இதையும் படிங்க: ’காக்கா பிரியாணியா?’.. உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை.. திருவள்ளூர் பகுதிகளில் பரபரப்பு!
இதனையடுத்து, இது குறித்து ஆற்காடு நகரப் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், ‘அகல்யா செருப்பு அணியாமல் கம்பியைத் தொட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது” என அவருடன் பயணித்த சந்தியா என்ற பெண் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.