இளைஞர்களை வலையில் வீழ்த்திய வடமாநில இளம்பெண்.. உல்லாச வாழ்க்கையால் உள்ளதும் போச்சு!
Author: Udayachandran RadhaKrishnan20 March 2025, 4:15 pm
சென்னை பல்லாவரம் அருகே திரிசூலம் இரயில்வே கேட் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரிய பை ஒன்றை கையில் வைத்திருந்த இளம்பெண் ஒருவரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால், போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்க: ஒருமுறை உறவுக்கு ரூ.5,000.. கண்டிஷன் போட்ட மனைவி.. கணவர் செய்த செயல்!
தொடர்ந்து முரண்பட்ட பதில்கள் அளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் மூன்று கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, அந்தப் பெண் பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, பெண் போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட இளம்பெண் திரிபுரா மாநிலம், உதைப்பூர் பகுதியைச் சேர்ந்த பாயல் தாஸ் (25) என்பதும், அவர் திருமணமானவர் மற்றும் ஒரு பெண் குழந்தை இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.
உல்லாச வாழ்க்கை ஆசையில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும், இதன் மூலம் வந்த பணத்தில் சென்னையில் வியாபாரம் செய்து திரிபுராவுக்கு விமானம் மூலம் திரும்பி வந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, மாதத்திற்கு நான்கு முறை திரிபுராவில் இருந்து மொத்தமாக ஐந்து கிலோ வரை கஞ்சாவை வாங்கி, இரயில் மூலம் சென்னையில் கடத்தி, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கில், அவர் சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி, அதில் தன்னை திருமணமாகாத கல்லூரி மாணவியாக காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இதன் மூலம், பல இளைஞர்கள் அவருடன் நண்பராக தொடர்பு கொண்டு, அவரிடம் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட உதவியதாகவும் போலீசார் தெரிவித்தனர். திரிபுராவில் ஒரு கிலோ கஞ்சாவை ₹5,000க்கு வாங்கி, சென்னையில் ₹15,000 முதல் ₹20,000 வரை விற்பனை செய்து வந்தார்.

இதில், அதிக லாபம் கிடைத்ததால் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்த செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தார். இளம் பெண் என்பதால் போலீசாருக்கு சந்தேகம் வராது என்பதால், மிக நிச்சயமாக இந்த மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
இன்ஸ்டாகிராம் மூலம் ஆண்களை தனது வலையில் சிக்க வைத்து, அவர்களின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு கஞ்சா விற்பனையில் அவர்களை பயன்படுத்திய தந்திரம் போலீசாரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பல்லாவரம் போலீசார் அவரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக போலீசாரை ஏமாற்றி, சென்னையில் கஞ்சா விற்பனை செய்த இளம் பெண் கைது செய்யப்பட்ட விவகாரம், பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
