காதலை ஏற்க மறுத்த இளம்பெண் காரில் கடத்தல்.. கட்டாய திருமணம் செய்ய முயற்சி..இறுதியில் டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan4 April 2025, 1:21 pm
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன்.
பி.காம் பட்டதாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் தான் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்லியிருக்கிறார்.
ஆனால் அந்த இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததுடன் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடமும் தெரிவித்திருக்கிறார். இதனையறிந்த ஜெகன், பெண்ணின் பெற்றோரிடம் நான் உங்கள் பெண்ணை காதலிக்கிறேன் அவரை திருமணம் செய்து கொடுங்கள் என வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.
இதையும் படியுங்க: உதயநிதியும், ஆ ராசாவும் விரைவல் கம்பி எண்ணுவார்கள் : இது ஹெச் ராஜா கணக்கு!
எங்கள் பெண்ணிற்கு இதில் உடன்பாடில்லை ஆகையால் இதனை கைவிடுமாறு கூறி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் தான் ஒருதலைப்பட்சமாக காதலித்த இளம் பெண்ணை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது நண்பர் ஒருவரின் பொலிரோ காரை இரவல் வாங்கிய ஜெகன் அதில் மூன்று நண்பரை அழைத்துக்கொண்டு இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதன்படி தனது நண்பர்களான ரீகன் ராஜ், சிவக்குமார், ரெஸ்லின் ஆகியோருடன் பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஜெகன். அவரை வெளியே வரும்படி அழைத்துள்ளார். அப்போது வெளியே வந்த அந்த இளம்பெண்னை ஜெகன் குண்டுகட்டாக தூக்கி காரில் வைத்து கடத்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்த பெற்றோர் மகளை மீட்க முயன்றனர். இருப்பினும் ஜெகன் உள்ளிட்ட 4 பேர் பெண்ணை காரில் கடத்திச் சென்றுவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் உதவி எண்ணிற்கு பெண்ணின் பெற்றோர் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருச்சி மாவட்டமல்லாது அருகில் இருக்கும் பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீசாருக்கு திருச்சி மாவட்ட போலீசார் தகவல் தெரிவித்து தேடுதல் பணியை தீவிர படுத்தினர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இளம் பெண்ணை கடத்தி வந்த காரை மடக்கி பிடித்து ஜெகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
இதனையடுத்து ஜெகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த சமயபுரம் போலீசார் இளம்பெண்னை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
மேலும் ஜெகன், ரீகன் ராஜ், சிவக்குமார், ரெஸ்லின் நான்கு பேர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.