’நான் குரு தான்டா பேசுறேன்’.. உருவ ஒற்றுமையால் அண்ணனை சிக்கவைத்த தம்பி.. கோர்ட்டையே அதிரவிட்ட சம்பவம்!
Author: Hariharasudhan4 December 2024, 1:57 pm
சென்னையில் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி அண்ணனின் சான்றிதழ்களைக் கொண்டு போலி வாழ்க்கை வாழ்ந்து வந்த தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்கள் பழனி மற்றும் பன்னீர்செல்வம். இவர்களில் 59 வயதாகும் பழனி, தன்னுடைய அண்ணன் பன்னீர்செல்வம் (62) போலவே உள்ளார். இதில் பழனி சரியாக படிக்காமலும், வேலை இல்லாமலும் இருந்து உள்ளார்.
இந்த நிலையில், அண்ணன் பன்னீர்செல்வத்தின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பழனி வேலை செய்து வந்துள்ளார். இதனால் அனைவரும் பழனியை, பன்னீர்செல்வம் என்றே நம்பியுள்ளனர். இதில் ஒருபடி மேலே சென்று, பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே, லூர்து மேரி என்றப் பெண்ணை காதலித்து பழனி திருமணம் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சான்றிதழ் பெயர் பன்னீர்செல்வம் என்றும், குடும்பத்தினர் தன்னை பழனி என்று கூப்பிடுவார்கள் என்றும் லூர்து மேரியை பழனி நம்ப வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், தம்பதிக்கிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்ததால், கடந்த 15 வருடங்களாகவே லூர்து மேரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில், தன்னுடைய கணவர் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக, பன்னீர்செல்வத்தின் மீது கோடம்பாக்கம் போலீசில் லூர்து மேரி புகார் அளித்தார். இந்தப் புகாரின்படி, போலீசாரும், பன்னீர்செல்வத்தின் பெயரில் வழக்குப் பதிவு செய்த வழக்கில், மகிளா நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிக் கொண்ட மாணவர்கள்.. பேருந்து நிலையத்தில் ஷாக் : வீடியோ வைரல்!
இதனையடுத்து, மகிளா நீதிமன்றம் பன்னீர்செல்வத்திற்கு 5 ஆண்டு சிறைட் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனையடுத்து, 5 ஆண்டு தண்டனை, 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, 3 வருட சிறைத் தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், பன்னீர்செல்வத்தைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, கோடம்பாக்கம் போலீசார் பன்னீர்செல்வத்தை கைது செய்ய முயன்றனர்.
ஆனால், நிஜமான பன்னீர்செல்வத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றுள்ளனர். இதனால் பதறிப்போன பன்னீர்செல்வம், என்னை எதுக்காக கைது செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு, உன் மனைவி தந்த புகாரில் தான் கைது செய்கிறோம் என போலீசார் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், அது நான் இல்லை என்றும், அது என்னுடைய தம்பி பழனி என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, புகார் தந்த லூர்து மேரியையே நேரடியாக அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, இவர் தன்னுடைய கணவர் இல்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பன்னீர்செல்வத்தின் தம்பி பழனி என்பதும், 20 வருடங்களாகவே பன்னீர்செல்வத்தின் சான்றிதழ்களை பயன்படுத்தி வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்து உள்ளது.
இதனிடையே, பழனி தலைமறைவாகினார். பின்னர் மடிப்பாக்கத்தில் பதுங்கியிருந்த பழனியை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு தனிப்படை போலீசார் 5 மாதங்களாக பழனியைத் தேடி கொண்டிருந்தபோது, பல்லாவரம், கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார் பழனி. அப்போது, மற்றொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.