பெட்ரோல் பங்கில் மதுபோதையில் இளைஞர்கள் ரகளை… ஊழியர்களை தாக்கி பெட்ரோல் பம்ப்பை உடைத்து அட்டூழியம் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan24 June 2022, 12:48 pm
விழுப்புரம் : ஜானகிபுரம் பெட்ரோல் பங்கில் மதுபோதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு பங்க் ஊழியர்களை தாக்கி பெட்ரோல் போடும் பம்பினை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் இரவு கண்டம்பாக்கம் கிராமப் பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர்.
அப்போது பெட்ரோல் நிரப்பிய பின்னரும் நீண்ட நேரமாக வாகனத்தை எடுக்காமல் இரு இளைஞர்கள் நின்று கொண்டிருந்ததால் பெட்ரோல் பங்க் மேலாளர் கார்த்தி வாகனத்துடன் தள்ளி நிற்க கூறியுள்ளார்.
மது போதையில் இருந்த இருவர் வாகனத்துடன் தள்ளி நிற்காமல் மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போதை தலைக்கேறியதால் பங்கில் இருந்த பங்க் ஊழியர்கள், பெட்ரோல் நிரப்ப வந்தவர்களுடன் சண்டையிட்டுள்ளனர்.
சண்டையை தடுக்கச் சென்ற டீசல் நிரப்ப வந்த லாரி ஓட்டுனர் ஹரி ராமன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோரையும் அந்த இளைஞர்கள் சராமாரியாக தாக்கியுள்ளனர். அதில் போதை இளைஞர்ஒருவர் பெட்ரோல் போடும் இயந்திர பம்புகளை கீழே அடித்தும் இரும்பு மணல் வாலி கொண்டு உடைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து பெட்ரோல் போட வந்தவர்கள் அங்கிருந்து பெட்ரோல் போடாமல் அலறி அடித்து ஓடினர். மது போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த காட்சி பதிவுகளை கொண்டு விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.