ரோட்டில் நடந்து சென்ற மாணவியிடம் சில்மிஷம்.. சிசிடிவி மூலம் சிக்கிய வாலிபர்!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2025, 1:23 pm
கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவி தனது வீட்டின் அருகே உள்ள அழகுகலை நிலையத்திற்கு பயிற்சி எடுத்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பயிற்சி முடிந்ததும், தனது வீட்டை நோக்கி தனியாக நடந்து சென்றார்.
இதையும் படியுங்க: OMR சாலையில் மீண்டும் கல்லூரி மாணவர்களால் பறிபோன உயிர்.. எப்படி நடந்தது?
அப்பொழுது அவரை இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்தார். அந்த நபர் திடீரென மாணவி மீது மோதுவது போன்று சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சாலையை விட்டு இறங்கி ஓரமாக நடந்து சென்றார்.
இதை அடுத்து அந்த வாலிபர் மாணவியின் அருகே வந்து பேச முயன்றார். ஆனால் மாணவி பேசவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மாணவியை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார்.
உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். இது குறித்து மாணவி செல்போன் மூலம் தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மாணவியை அழைத்துச் சென்றார். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மாணவி மீது மோதுவது போல் சென்றது திரும்பி வந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது.
மேலும் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் பதிவு எண் தெளிவாகத் தெரிந்தது. அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நெல்லை சேர்ந்த சரத்குமார் என்பதும், கோவை அருகே பூசாரிபாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்வது தெரிய வந்தது.
உடனே போலீசார் சரத்குமார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.