மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!
Author: Hariharasudhan1 March 2025, 2:50 pm
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான பெண் மாற்றுத்திறனாளி. இவருக்கு காது கேளாமலும், வாய் பேசவும் முடியாது. மேலும், திருமணம் செய்து கொள்ளாமல் இவர் தனது பெற்றோருடனே வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது பெற்றோர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று வெளியில் சென்றுள்ளனர்.
பின்னர், இரவு நிகழ்ச்சி முடித்து வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த மகள், மிகுந்த சோர்வாக இருப்பதை உணர்ந்துள்ளனர். எனவே, என்ன நடந்தது என அவரிடம் விசாரித்துள்ளனர். இதற்கு, வாய் பேச முடியாத அந்த மாற்றுத்திறனாளிப் பெண், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து சைகை மொழியில் அழுதபடி கூறியுள்ளார்.
இதன்படி, அப்பெண்ணின் பெற்றோர், அவர்களது உறவினரின் மகன் விஷால் (21) என்பவரை சிறு வயது முதலே வளர்த்து வந்துள்ளனர். விஷாலுக்கு பெற்றோர் இல்லை என்பதால், தனது சொந்த மகனைப்போலபே வளர்த்துள்ளனர். எப்போதும் இவர்களது வீட்டிற்கு வந்து செல்லும் தம்பியாக பாவித்தும் பாசம் காட்டி வந்துள்ளார் அப்பெண்.

ஆனால், நேற்று அவரது பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த விஷால், முன் எப்போதும் இல்லாத மாதிரி நடந்துகொண்டுள்ளார். குறிப்பாக, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அப்பெண் மயங்கிவிட, விஷால் அங்கிருந்து விஷால் தப்பி ஓடியுள்ளார்.
இதையும் படிங்க: உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!
எனவே, தனக்கு நேர்ந்த துயரத்தைச் சொல்லி அழ முடியாமல் தவித்துள்ளார் அந்தப் பெண். பின்னர், இது குறித்து பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்படி நடத்திய விசாரணையில், அவர்களின் மற்றொரு நண்பன் வீட்டில் விஷால் பதுங்கி இருப்பது தெரிந்துள்ளது.
இதனையடுத்து, நிகழ்விடம் சென்ற போலீசார், அங்கு மது போதையில் இருந்த விஷாலைக் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
