கிண்டி மருத்துவமனையில் பறிபோன உயிர்.. கதறும் உறவினர்கள்!
Author: Hariharasudhan15 November 2024, 2:18 pm
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் வயிற்று வலி காரணமாக, நேற்று (நவ.14) கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில், விக்னேஷுக்கு பித்தப்பை கல் பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் அவரச சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
பின்னர், அவர் இன்று (நவ.15) உயிரிழந்து உள்ளார். ஆனால், முறையான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பணியில் இல்லாததே காரணம் எனக் கூறிய விக்னேஷின் உறவினர்கள், மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விக்னேஷின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மருத்துவமனை விளக்கம்: இந்த நிலையில், இவ்விவகாரம் பூதாகரமானதை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், “போதிய அளவு மருத்துவர்கள் பணியில் இருந்தனர். விக்னேஷை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, முறையான சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சிதறிய சதை.. பறிபோன இளைஞர்களின் உயிர்.. டேராடூன் கொடூர விபத்து
மேலும், “விக்னேஷின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அவரது தந்தை மற்றும் மனைவியிடம் அழைத்து பேசப்பட்டது. இன்னும் 5 நிமிடங்கள் தான் விக்னேஷ் உயிரோடு இருப்பார் என்று அவர்களிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், விக்னேஷ் உயிரிழந்தார்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக, நேற்றைய முன்தினம் (நவ.13) இதே கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை அவரிடம் சிகிச்சை பெற்ற பெண்ணின் மகன் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், மீண்டும் அதே மருத்துவமனையில் ஒரு பிரச்னை ஏற்பட்டு உள்ளது.