அரிவாளுடன் கோவில் கருவறைக்குள் புகுந்து மிரட்டிய இளைஞர்… .. ஒரு மணிநேரம் நடந்த போராட்டம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
2 March 2024, 3:46 pm

புதுக்கோட்டையில் கோவில் கருவறைக்குள் அரிவாளுடன் பதுங்கி பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி – பூங்கோதை தம்பதியர். இவர்களது மகன் வினோத் (வயது 27). சென்னையில் பணிபுரிந்து வந்த வினோத், தனது திருமண நிகழ்விற்காக தற்சமயம் புதுக்கோட்டையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வினோத் சகோதரர் இறந்த நிலையில், ஒரு வருடமாக வினோத் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை பெற்றோரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று வினோத் கூறியுள்ளார். இதனையடுத்து வினோத்தை, அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்த வினோத், அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குள் சென்று அங்கிருந்த அரிவாளை கையில் எடுத்துக் கொண்டு, கருவறைக்குள் பதுங்கிக் கொண்டார். மேலும் கோவிலுக்குள் இருந்தவர்களை மிரட்டியும் உள்ளார்.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல் துறைக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காவல்துறை உதவியோடு, தண்ணீர் பீய்ச்சி அடித்து, கையில் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து, மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வினோத்தை கயிற்றால் கட்டி வெளியே தூக்கி வந்தனர். இதையடுத்து, மன நல மருத்துவர் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் வினோத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் இச்சம்பவத்தால் மேலும் பரபரப்பாக காணப்பட்டது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?