வசதியான வீடுகளை நோட்டமிட்ட இளைஞர் கும்பல்..கஞ்சா போதையில் ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள்: கோவையில் பரபரப்பு..!!

Author: Rajesh
23 March 2022, 3:30 pm

கோவை: கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அடுத்த காரமடை அருகே கண்ணார் பாளையம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ரங்கா நகர் பகுதியில் நேற்று 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று வெகு நேரமாக சுற்றி திரிந்தனர். இதனை பார்த்த அந்த பகுதி மக்களுக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

வீடுகளை நோட்டமிட்டு சென்றதால் அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து, காரமடை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் ஜீப் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர்.

போலீசார் வாகனத்தை விட்டு இறங்கி துரத்தி சென்று 7 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்தனர். அவர்களை சோதனை செய்தபோது கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து அவர்கள் அனைவரையும் காரமடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

குடியிருப்பு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தவர்கள் காரமடை கண்ணார்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன் ராஜேந்திரன்(21), பெரம்பலூரை சேர்ந்த முத்துகுமார்(22), சரத்குமார்(21), நீலகிரி கூடலூரை சேர்ந்த பிரவீன்(21), பிரதீப்(23) மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அகிலேஷ்(21), தவுபிக்(21) என்பதும், காரமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் அந்த பகுதியில் உள்ள வசதியான வீடுகளை நோட்டமிட்டு, கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டி அங்கு சுற்றி திரிந்ததும், கொள்ளை சம்பவத்தின் போது யாராவது தடுக்க முயன்றால் அவர்களை தாக்குவதற்காக கத்தி, உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1357

    0

    0