காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்… அவசர அவசரமாக 300 கி.மீ. கடந்து வந்த காதலன்… இறுதியில் நடந்த சோகம் ; இருவர் கைது..!!

Author: Babu Lakshmanan
21 August 2023, 6:02 pm

கோவில்பட்டி அருகே காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதை தடுத்து நிறுத்த முயற்சித்த காதலன் அடித்து கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்காமணி என்பவரின் மகன் மாரியப்பன் (28). இவர் கோயம்புத்தூரில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த பெண் வீட்டார் அப்பெண்ணுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவருடன் திருமணம் ஏற்பாடு செய்து இன்று (21.08.2023) திருமணம் நடைபெற இருந்தது.

இதையறிந்து கடந்த 18ம் தேதி மாரியப்பன் கோயம்புத்தூரில் இருந்து குளத்தூர் சுப்பிரமணியபுரத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், 19ம் தேதி காலை மாரியப்பன் கிராமத்தின் பனங்காட்டுப் பகுதியில் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதனைக் கண்ட அப்பகுதிவாசிகள் குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாரியப்பனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீஸாரின் விசாரணையில், 18 ஆம் தேதி இரவு மாரியப்பன் தான் காதலித்த பெண்ணை சந்திக்க முயற்சித்துள்ளார். அப்போது, அப்பெண்ணின் உறவினர்கள் மாடசாமி மற்றும் முனியசாமி என்ற ராஜூ ஆகியோர் தடுத்துள்ளனர். அப்போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மாரியப்பனை, மாடசாமியும், முனியசாமி என்ற ராஜுவும் சேர்ந்து மாரியப்பனின் கழுத்திலும், அடி வயிற்றிலும் மிதித்து கற்களை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, குளத்தூர் காவல் நிலைய போலீசார் விளாத்திகுளம் வைப்பாறு காட்டு பகுதியில் பதுங்கி இருந்த மாடசாமியையும் முனியசாமி என்ற ராஜீவையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், காதலித்த பெண்ணை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசையில் கோவையிலிருந்து குளத்தூர் சுப்பிரமணியபுரத்துக்கு விரைந்து வந்த பெயிண்டர் மாரியப்பனின் ஆசை நிராசையாக ஆகி கடைசியில் கொலையில் முடிந்திருப்பது விளாத்திகுளம் வட்டார மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 334

    0

    0