பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிப்படுகொலை : நண்பர்களே கொலை செய்து காவல்நிலையத்தில் சரண்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 January 2022, 7:23 pm

கோவை : அன்னூரில் பணம் கொடுக்கல்,வாங்கலில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் சரணடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரன் (வயது 55 ).இவரது மகன் சரவண சுந்தரம் (வயது 19). சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல பிள்ளையப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் என்கிற பகவான்ஜி (வயது 26 ). சொந்தமாக ஆட்டோ வைத்து கரியாம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.இந்து அமைப்பிலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவரது நண்பர் ராஜராஜன் (வயது 20).

இந்நிலையில் சரவண சுந்தரத்திற்கும்,தமிழ்ச்செல்வத்திற்கும் கொடுங்கல்,வாங்கலில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அன்னூரை அடுத்துள்ள மைல்கல் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரவண சுந்தரத்தை தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பரான ராஜராஜன் உள்ளிட்ட இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் சரவண சுந்தரத்தின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வெட்டிய இருவருக்குமே லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

சரவண சுந்தரத்தை வெட்டிய தமிழ்ச்செல்வன், ராஜராஜன் உள்ளிட்ட இருவரும் நேரடியாக அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த சரவண சுந்தரத்தை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும்,இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெட்டிய இருவரையும் கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை இருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அன்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 3400

    0

    0