புதுச்சேரி : புதுச்சேரி அருகே இளைஞர் ஒருவர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்த மூலகுளம் பகுதியில் சீனிவாசன்(எ)மூர்த்தி (31) தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை வீட்டு விட்டு வெளியே சென்று பின்னர் மீண்டும் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் சேர்ந்தநத்தம் சுடுகாட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக இன்று வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கொலை செய்யப்பட்டது சீனிவாசன்(எ)மூர்த்தி என்பதும் தெரியவந்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நண்பர்களிடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? இல்லை வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.