சாத்தான்குளம் பேச்சி வீட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை.. போலீசார் விசாரணை!
Author: Hariharasudhan7 February 2025, 12:41 pm
தூத்துக்குடி, சாத்தான்குளம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த அமுதுண்ணாங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு (20). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண்ணைக் காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால், திருமணமான அடுத்த சில நாட்களிலேயே அந்தப் பெண் அவரைப் பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று (பிப்.06) இரவு, சந்துரு அண்ணாநகர் பகுதியில் அவர் வேலை செய்ததற்கான ஊதியத்தை வாங்குவதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த பேச்சி என்பவரது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் சந்துருவை நோக்கி ஓடி வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு, மிகுந்த உயிர் பயத்துடன் தப்பிக்க முயற்சித்துள்ளார். பின்னர், பேச்சியின் வீட்டிற்குள் உயிர் பயத்துடன் ஓடிய நிலையில், அந்த கும்பல் ஓட ஓட விரட்டி பேச்சியின் வீட்டிற்குள் வைத்தே சந்துருவின் முகத்தைக் கொடூரமாக சிதைத்து படுகொலை செய்துள்ளது.
இதனையடுத்து, அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது. இதனையடுத்து, இது குறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்துருவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: விஜய் – ஸ்டாலின் ஒரே நாளில் மறைமுக மோதல்.. பரபரப்பில் அரசியல் களம்!
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வேகமாக ஓடிய மோப்ப நாய், நாகர்கோவில் சாலையில் ஒரு முக்கிய ஆதாரத்தை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.