பைக்கில் சென்று ஆடு திருடிய இளைஞர்கள்.. துரத்திப்பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!
Author: Vignesh19 August 2024, 1:36 pm
திருப்பூர் அருகே ஊத்துக்குளி பகுதியில் ஆடு திருடிய வாலிபர்களை பொதுமக்கள் துரத்திப்பிடித்து தர்ம அடி கொடுத்து ஊத்துக்குளி போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி(44). இந்நிலையில், பாப்பாத்தி (18/08/24) மாலை 5 மணியளவில் அணைப்பாளையம், இரட்டைகிணறு பகுதியில் ஆடு மேய்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது, பல்சர் பைக்கில் வந்த இரு வாலிபர்கள் பாப்பாத்தியை கீழே தள்ளிவிட்டு ஆட்டை திருடி சென்றனர்.
இதனையடுத்து, பாப்பாத்தி சத்தமிடவே அருகிலிருந்தவர்கள் ஆடு திருடிய வாலிபர்களை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். இதனை கண்ட வாலிபர்கள் பைக்கில் வேகமாக சென்ற போது, தொட்டிபாளையம் நால்ரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்து பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.
இதனையடுத்து, இரு வாலிபர்களையும் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் காயமடைந்த வாலிபர்களை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு இரு வாலிபர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் திருப்பூரை சேர்ந்த மணிகண்டன்(25), பாலகிருஷ்ணன்(22) என்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.