திருச்சியை கலங்கடிக்க வைத்த யூடியூபர் அசார்… வைரலான வீடியோ ; அடுத்த நிமிடமே பஞ்சராக்கிய போலீசார்…!!
Author: Babu Lakshmanan16 May 2023, 4:17 pm
சமீப காலங்களில் இன்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் youtube லைவ், facebook லைவ் என சமையல், நடனம், டிராவல், வீட்டு மொட்டை மாடியில் காய்கறி செடிகள் வளர்ப்பது வரை காணொளி காட்சிகளை பதிவிட்டு பலரின் கவனத்தை ஈர்ப்பதோடு கணிசமான வருவாயும் ஈட்டி வருகின்றனர்.
Travel vlogger டிடிஎஃப் வாசன் இதற்கு முன் உதாரணமாக கூறலாம். அதேபோல, திருச்சியை பூர்வீகமாக கொண்ட அசார் என்பவர் இருசக்கர வாகனத்தை அசாத்தியமாக ஒட்டி லைக்குகளை அள்ளி வருகிறார். இவர் வைத்திருக்கும்
1000 RR வகை இருசக்கர வாகனத்தின் விலை 20 லட்சம் ரூபாய் என்பதால் இளைஞர்கள் பலரும் வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள்.
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சப்ஸ்கிரைப்பர்கள் இருந்த நிலையில், அவர் பதிவிட்ட அலப்பறை வீடியோக்களால் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை தற்போது 1.20 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரு பிரபல நடிகருக்கு கூட சேராத கூட்டம் இந்த கெட்டவன் அசாருக்கு கூடுகிறது.
தனது பெயரில் அதாவது அசார் கெட்டவன் என்ற பெயரிலேயே இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிடுகிறார். தனது விலை உயர்ந்த பைக்கை எடுத்துக் கொண்டு, ஊர் ஊராக சுற்றி யாருப்பா நீ? எங்க போற? என பலரும் பிரமிப்புடன் பார்க்கும் வகையில் தனது பின்னே நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க தனது பயணத்தை தொடங்குவார்.
அந்த வகையில் நேற்று மாலை திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே ஸ்டூடண்ட்ஸ் ரோடு எனப்படும் நீதிமன்ற சாலையில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் உறுமல்களுடன் கூச்சலுக்கு இடையே தனது பயணத்தை தொடர்ந்தார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர் பின்னே வந்த பலரும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் காலெடுத்து வைக்கும் இளைஞர்கள் தான்.
இரு தினங்களுக்கு முன்பே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் திருச்சியில் சந்திப்போம் என நேற்று மாலை 4.30 மணிக்கு எனது தனது சப்ஸ்கிரைபர்களுக்கு தகவல் தெரிவித்த அசார், அதன்படி நேற்று மாலை தனது அலப்பறை ஆட்டத்தை அரங்கேற்றினார்.இது குறித்த வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.
பிரபல youtuber அகஸ்தியா சௌஹான் தனது சேனலை Promote செய்ய தனது பைக்கில் 300 கிலோமீட்டர் வேகத்தை தொடும்போது சென்ட்ரல் மீடியனில் மோதி உயிரிழந்தார். 22 வயதில் ஒரு திரிலிலுக்காக சாகசத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் தனது உயிரை பறி கொடுத்தார். 100ல் போனால் 108ல் போக நேரிடும் என்பதை மறந்து அசுர வேகத்தை தொட்ட அகஸ்திய சவ்கானின் மரணம் ஒரு எச்சரிக்கை என்பதை அசார் நினைவில் கொள்ள வேண்டும்.
இதனிடையே, திருச்சியில் பைக் ரைடர் அசார் மீது மாவட்ட அமர்வு நீதிமன்ற போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு, அனுமதி இல்லாமல் ஊர்வலம் சென்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பைக் ரைடர் அசாருக்கு ரூ.11,000 அபராதமும் விதித்தனர்.