இனி திரைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி ஜாலியா என்ஜாய் பண்ணுங்க!!!
Author: Hemalatha Ramkumar5 June 2022, 7:40 pm
மெட்டாவுக்குச் சொந்தமான பிரபலமான உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் புதிய அப்டேட் மூலம் அதிகமான பயனர்களுக்கு 2GB அளவு வரை ஃபைல்களை அனுப்பும் திறனை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த அம்சம் முன்பு குறிப்பிட்ட சில பயனர்களுக்கு வெளிவரத் தொடங்கிய நிலையில், இப்போது உலகம் முழுவதும் உள்ள அதிகமான பயனர்களுக்கு இது வெளிவருகிறது. இந்த புதிய அம்சம் முதலில் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில், வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் அர்ஜென்டினாவில் சோதிக்கப்பட்டது. ஆனால் இப்போது அது மற்ற பிராந்தியங்களில் அதிகமானவர்களுக்கு வெளியிடப்படுகிறது. புதிய 2GB ஃபைல் அனுப்பும் வரம்பு Android மற்றும் iOS பயனர்களுக்குக் கிடைக்கும்.
இதன் மூலம், வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது 2GB அளவிலான ஆவணங்கள், மீடியா கோப்புகள், படங்கள், வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கும். இது பயனர்களுக்கு பெரிய அளவில் திரைப்படங்களை அனுப்ப உதவும். இதனால் படத்தின் தரம் குறையாது.
உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் மற்றும் பதிவுகளை உருவாக்கும் சிறந்த கேமராக்களுடன் ஃபோன்கள் வருவதால். வாட்ஸ்அப் மூலம் அவற்றை அனுப்புவது அளவு கட்டுப்பாடு காரணமாக பலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வரம்பு பயனர்கள் அதிக மீடியா ஃபைல்களை கம்ப்ரஸ் செய்யாமல் அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும். தற்போது, வாட்ஸ்அப் பயனர்கள் 100MB வரையிலான ஃபைல்களை மட்டுமே அனுப்ப அனுமதிக்கிறது.
100MB க்கும் அதிகமான மற்றும் 2GB க்கும் குறைவான அளவு கொண்ட எந்தவொரு கனமான ஃபைலையும் அனுப்புவதன் மூலம் இந்த அம்சத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.