Phone Pay, G Pay வாடிக்கையாளர்களே உஷார்.. ஒரே ஒரு கிளிக் செய்தால் அம்பேல்தான் : வங்கிகள் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2022, 5:43 pm

ஆண்டிராய்டு செல்போன்களில் சோவா என்ற வைரஸ் மூலமாக ஹேக்கர்கள் வங்கிக் கணக்குகளின் ரகசிய தகவல்களை திருடும் வாய்ப்பு இருப்பதாக கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இப்போது பண பரிவர்த்தனைகள் பெரும்பாலும் கூகுள் பே, போன் பே, பே டிஎம் என டிஜிட்டல் செயலிகள் மூலமாகவே நடைபெறுகின்றன. எனவே ஹேக்கர்களும் ஸ்மார்ட்போன்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வைரஸ்களை கண்டுபிடித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உங்கள் செல்போனுக்குள் வைரஸ்களை அனுமதிக்காதீர்கள். நம்பிக்கையான செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்திருங்கள் என எச்சரித்து இருக்கிறது.

ஆண்டிராய்டு இயங்குதளங்களில் செயல்படும் சோவா என்ற வைரஸ், மக்களை குறிவைத்து போலியான வங்கி செயலிகளை அறிமுகம் செய்கிறது. இதை பதிவிறக்கம் செய்த பின்னர் மக்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் ஃபாஸ்வேர்டுகளை திருடப்படுகிறது.

இணையதளங்கள், செயலிகளில் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது தகவல்களை இந்த செயலி திருடி வைத்துக்கொள்கிறது.
இந்த செயலியை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்த பின்னர் மீண்டும் அதை நீக்க முடியாது என ஸ்டேட் வங்கி எச்சரித்து உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “போலி எஸ்.எம்.எஸ். மூலமாக இந்த வைரஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதை பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன் ஸ்மார்ட்போனில் இருக்கும் மற்ற செயலிகள் குறித்த விபரங்கள் ஹேக்கர்களுக்கு செல்லும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதன் பின்னர் நமது ஸ்மார்ட்போனில் இருக்கும் செயலிகள் ஹேக்கர்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். அவர்கள் தங்களுக்கு தேவையான (வங்கி) செயலிகளுக்கு தனித்தனியாக வைரஸ்களை அனுப்பி வைப்பார்கள்.
எப்போதெல்லாம் நாம் அந்த செயலிகளை பயன்படுத்துகிறோமோ அப்போதெல்லாம் நமது தகவல்கள் ஹேக்கர்களுக்கு அனுப்பப்படும்.
இந்த சோவா வைரஸ் மூலமாக நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து செயலிகளின் பயன்பாட்டையும் கண்காணிக்க முடியும். முக்கியமான பாஸ்வேர்டுகள், தனிப்பட்ட விபரங்களை திருடலாம்.

ஹேக்கர்கள் தங்களுக்கு தேவைப்பட்டால் நமது செல்போன் டிஸ்பிளேவை ஸ்க்ரீன் ஷாட் கூட எடுத்துக்கொள்ளலாம். செல்போனில் இருக்கும் கேமராவை பயன்படுத்தி வீடியோ எடுக்கவும் செய்யலாம்.

ஒருமுறை இந்த வைரஸ் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டால் பின்னர் அதை நீக்குவது கடினம் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். இதை தவிர்ப்பதற்கான ஒரே வழி கவனமாக இருப்பது மட்டுமே. எனவே தெரியாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் விமர்சனங்களை படித்துப் பார்ப்பதுடன், ஆப்களுக்கு அனுமதி வழங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆண்டிராய்டு அப்டேட்டுகளை முறையாக செய்வதுடன் ஆண்டி வைரசை பயன்படுத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?