கவரை மாற்றி விலையை உயர்த்துகிறதா? கண்டனங்களைத் தொடர்ந்து ஆவின் விளக்கம்!
Author: Hariharasudhan18 October 2024, 2:42 pm
எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என கிரீன் மேஜிக் ப்ளஸ் விலை உயர்வு குறித்த தகவலுக்கு ஆவின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆவின் கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் பாக்கெட் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை உறை பாலில் உள்ள அதே 4.5% கொழுப்புச் சத்து, அதே 9 % கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் (Solids Not Fat -SNF) கொண்ட பாலை ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது. கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலின் விலையை மறைமுகமாக உயர்த்தும் ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.
ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கிரீன் மேஜிக் 500 மிலி உறைகளில் ரூ.22க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்படும். அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். ஆவின் கிரீன் மேஜிக் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத சத்துகளுக்கும், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலில் உள்ள சத்துகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பால் உறையின் வண்ணத்தை மாற்றி பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக சேர்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும்.
ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் கூடுதல் வகையாக மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், அதை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்து விடலாம். ஆனால், தமிழ்நாடு முழுவதும் இந்த வகை பாலை அறிமுகம் செய்து விட்டு, லிட்டர் ரூ.44க்கு விற்கப்படும் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தி விடுவது தான் ஆவின் நிறுவனத்தின் திட்டம் ஆகும். இதன் மூலம் ஆவின் பச்சை உறை பாலை நுகர்வோர் வேறு பெயரில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.
விலை உயர்வை விட கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், விலை உயர்வு அதிகமாக தெரியக்கூடாது என்பதற்காக ஓர் உறையின் விலையை ரூ.3 உயர்த்தி விட்டு, பாலின் அளவை 50 மிலி குறைத்திருப்பது தான். இது வணிக அறம் அல்ல. வழக்கமாக தனியார் நிறுவனங்கள் தான் விலை உயர்வை மக்கள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்கான அளவைக் குறைக்கும் மோசடியில் ஈடுபடும். தனியார் நிறுவனங்கள் கையாளும் அதே மோசடியை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனமும் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை பலமுறை உயர்த்திய திமுக அரசு, பாலின் தரத்தை உயர்த்தாமல் பெயரை மட்டும் மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை மறைமுகமாக விலையை உயர்த்துவதோடு, அதன் எடையையும் குறைக்க திட்டமிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், பால் பாக்கெட்டுகளின் எடை மற்றும் கொழுப்புச் சத்தை குறைத்து அதன் விலையை உயர்த்தும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும் என பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் பால் விலையை உயர்த்தும் முடிவை கைவிடுவதோடு, ஆவின் நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : நடிகை தமன்னா விரைவில் கைது? அமலாக்கத்துறை விசாரணையில் கிடுக்குப்பிடி.. என்ன நடந்தது?
இந்த நிலையில், ஆவின் மேலாண்மை இயக்குநர் வினீத் வெளியிட்ட விளக்கத்தில், “ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்களிடம் கருத்துக்களையும் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் வகைகளை விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.