நாள் குறித்த அதிமுக – தேமுதிக – தவெக.. மாறப் போகிறதா தமிழக அரசியல் களம்?
Author: Hariharasudhan2 நவம்பர் 2024, 7:33 மணி
தவெக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர்: நாளுக்கு நாள் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டே செல்கிறது. சுதந்திரம் அடைந்த பிறகு தேசிய கட்சியான காங்கிரசின் பெருந்தலைவர்கள் தமிழ்நாட்டை ஆண்ட நிலையில், திராவிடம் என்னும் கருதுகோளை கொண்டு வந்து சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபெரும் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து வருகின்றன. சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரிலும், எம்.ஜி.இராமச்சந்திரன், ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் மறுபுறம் அதிமுக என்ற பெயரிலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.
இவர்கள் அனைவருமே ஆளுமைகள் தான் என இன்றைய அரசியல் விமர்சர்களால் இன்று வரை கருதப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காலமாகினர். இதனை அடுத்து, இரண்டு கட்சியிலும் பல்வேறு குழப்பங்கள், சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு மத்தியில் திமுக தலைவராக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.
இந்த இருபெரும் திராவிட கட்சிகள் உடனே தமிழ்நாட்டில் கூட்டணி அமையும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இதனிடையே, இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சீமான், நாம் தமிழர் கட்சி என்னும் புதிய ஒரு கட்சியைத் தொடங்கி, அடுத்தடுத்த தேர்தல்களில் தனித்து நின்று போட்டியிட்டு வருகிறார். இதில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் என பலர் பல்வேறு விமர்சனங்களையும், கருத்து மோதல்களையும் தாங்கி வந்தாலும், சீமான் இன்று வரை தனித்து போட்டி என்பதில் நிலை கொண்டு இருக்கிறார். இதனால் இவர்களது கட்சியின் பின்னால் இளைஞர் பட்டாளம் இருக்கிறது என அரசியல் கருத்து நிலவியது.
இந்த நிலையில் தான், தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக விளங்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், பல வருடங்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடிகர் கட்சியைத் தொடங்கியிருக்கிறார், அதுவும் அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறார் என்பதே அதற்கு காரணம்.
இதனை அடுத்து, கட்சியின் கொடி, பாடல், கொள்கை கோட்பாடுகள், செயல்திட்டம், கூட்டணி வியூகம் என அனைத்தையும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் அறிவித்தார் விஜய். தமிழ் தேசியமும், திராவிடமும் தமது இரு கண்கள் என்றும், அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும் என்றும் விஜய் கூறினார். இது வெளிப்படையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு விரிக்கப்பட்ட வலை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம், திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் ஒன்றிணைக்க முடியாது எனவும், விஜய் தவறான இடத்தில், தவறான கொள்கையில் இருக்கிறார் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனிடையே. திருமாவளவனும், விஜயும் ஒரே மேடையில் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.
இந்த நிலையில் தான், நவம்பர் 6ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் அதிமுகவை நாம் கவனிக்க வேண்டிய காரணம் என்னவென்றால், விஜயின் சுமார் 50 நிமிட முதல் அரசியல் கன்னிப் பேச்சில், ஒரு இடத்தில் கூட அதிமுகவை அவர் விமர்சிக்கவில்லை. எம்ஜிஆரைப் புகழ்ந்தும் பேசி இருந்தார் விஜய். இதனை அடுத்து, இந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், விஜய் குறித்து தற்போதைக்கு அதிமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், கோட் படத்திற்கு முன்னதாக மரியாதை நிமித்தமாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் நேரில் சந்தித்தனர். அப்போது அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும். மாநாட்டிற்குப் பிறகு தேமுதிக சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் களமிறக்கப்பட்ட விஜய பிரபாகரன், விஜயின் கருத்தை ஆதரித்தும் ஆதரிக்காமலும் பேசி இருந்தார். இந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதி தேமுதிக ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது.
இதையும் படிங்க : அவசர அழைப்பு விடுத்த தவெக.. விஜய் முக்கிய ஆலோசனை.. பரபரக்கும் களம்!
அதேநேரம், விஜய் இதைவிட மிகவும் வேகமாக, நாளை (நவ.3) தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் உடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அரசியல் மேடையை பரபரப்பாக்கி உள்ள மூன்று கட்சிகளும், தங்களது கூட்டத்தை அடுத்தடுத்து நடத்த இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
0
0