அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2024, 7:30 pm

சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் இறந்தது சோக நிகழ்ச்சியாக மாறி உள்ளது. தேசப்பற்றுடன் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடுமையால் தேசமே தலை குனிந்து நிற்கிறது.

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை விமான சாகச நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இந்த நிகழ்வு லிம்கா கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

இந்த விமான சாகசத்தை கண்டுகளிக்கச் சென்ற 240க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர்ச்சத்து குறைபாட்டால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியில்லாததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இந்த கொடுமையா நிகழ்ச்சி குறித்து கனிமொழி எம்.பி. கூயதாவது: சமாளிக்க முடியாத கூட்டங்களை இனி தவிர்க்க வேண்டும். விமான சாகச நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

marina Beach air show

இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
.திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது: இந்திய விமானப்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 240 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், திமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்.
முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை.

இது அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது.
5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு.

தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமானப்படை சாகசத்தைக் காண வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் . லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசால் செய்ய முடியவில்லை. பாதுகாப்புத் துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டதாக பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது இத்தகைய சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை அரசு கற்றுக் கொள்ள வேண்டும் , இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை ஏற்று லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடினார்கள். தமிழ்நாடு அரசு தக்க ஏற்பாடுகள் செய்திருந்தால், இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டு இருக்காது.தமிழ்நாடு அரசின் செயலற்றத்தன்மையால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.திட்டமிட்டு முன்கூட்டியேஅடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொடுத்திருக்க வேண்டும்.அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க நினைக்கக்கூடாது என கடுமையாக எச்சரித்து உள்ளார்.

இதே போல காங்கிரஸ் சிவகங்கை தொகுதி எம்.பி .கார்த்திக் சிதம்பரமும் வானத்தில் சாகசம், தரையில் சோகமும் நடந்துள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு விளக்கம் : விமான சாகசம் – கூட்டத்தில் யாரும் இறக்கவில்லை என அரசு விளக்கமளித்துள்ளது.

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
வெயில் காரணமாக மயக்கமடைந்தவர்கள், சிகிச்சைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெயிலால் மயக்கமடைந்த ஒருவர்கூட ராயப்பேட்டை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியிருப்பதாவது : இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா வில் பல லட்சக்கணக்கில் மக்கள் கூடும் இடத்தில் செய்யவேண்டிய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், மருத்துவ மற்றும் அவசர ஊர்தி வசதிகள், போக்குவரத்து வசதிகளை கவனத்தில் கொள்ளாமல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சொல்லொனா துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல், சுட்டெரிக்கும் வெயில் மற்றும் மூச்சு திணறால் பல நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு 5 உயிர்கள் பலியாகியுள்ளன. கூட்டத்தில் மயங்கி விழுந்த மக்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட செய்ய முடியாத பரிதாப நிலையே அங்கு காணப்பட்டது. ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சியில் இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றதாக தெரியவில்லை.

லிம்கா சாதனையை மையப்படுத்தி ஒரு நிகழ்ச்சியை திட்டமிடும் போது அதற்குண்டான வசதிகளை ஏற்பாடு செய்யாமல், வெற்று விளம்பரத்திற்காக நிகழ்ச்சியை நடத்தி, பல லட்சக்கணக்கில் மக்களை திரட்டி, மக்களை சொல்லொனா துன்பங்களுக்கு ஆளாக்கியதில் தமிழக அரசுக்கும் பங்குள்ளது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தமிழக அரசின் தோல்வியையே காட்டுகிறது.
மிகமுக்கியமாக சென்னை மாநகர காவல்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளிலும் மிகப்பெரிய தவறிழைத்துள்ளது.

அதேபோல் நிகழ்ச்சி முடிந்து திரும்பும் மக்களை ஏற்றிச் செல்ல போதிய போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்காத காரணத்தால் ஏற்பட்ட நெரிசலால் சென்னையே பல மணிநேரம் திணறியுள்ளது. ஏற்கனவே நடந்த ஒரு நிகழ்விலிருந்து பாடம் கற்காமல் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்வது ஏற்புடையதல்ல. தேசிய நிகழ்ச்சிக்கு தேசப்பற்றுடன் வந்த பலருக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்திலாவது இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது விளம்பர நோக்கில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்கள் நலனிலும் அக்கறை கொண்டு நடத்த வேண்டும். மக்கள் நலனில் பூஜ்யம் …விளம்பரத்தால்ராஜ்ஜியம் என்று இருப்பதை அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 231

    0

    0