ரிப்பன் மாளிகையில் கால்பந்து ஆடிய உறுப்பினர்கள்.. சென்னை மாநகராட்சி எடுத்த முடிவு!
Author: Hariharasudhan30 October 2024, 12:46 pm
சென்னையில் உள்ள 9 கால்பந்து மைதானங்களை தனியார்மயமாக்கலுக்கு கூட்டணி கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நேற்று (அக்.29) ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை மேயர் மு.மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடுவது உள்பட 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த வகையில், வியாசர்பாடி முல்லை நகர் மைதானம், நேவல் மருத்துவமனை சாலை மைதானம், திரு.வி.க.நகர் மைதானம், ரங்கசாய் மைதானம், கே.பி.பூங்கா மைதானம், மேயர் சத்தியமூர்த்தி சாலை டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மைதானம், அம்மா மாளிகை விளையாட்டு மைதானம், காமகோடி நகர் விளையாட்டு மைதானம், சோழிங்கநல்லூர் (ஓஎம்ஆர்) மைதானம் ஆகியவற்றில் செயற்கை புல் தரை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஏற்படும் நிதிசுமையைத் தவிர்க்க, வருவாய் பகிர்வு அடிப்படையில் பணி மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேநேரம், இந்த மைதானத்தில் விளையாடுவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக தனி நபர் ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 10 நபர் விளையாடும் போது, ஒரு மணி நேரத்துக்கு 1,200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் ஒரு விளையாட்டு மைதானத்தில் இருந்து மாதம் ரூ.2.16 லட்சம் வருவாய் கிடைக்கும். இந்த 9 மைதானங்கள் மூலம் ஆண்டுக்கு 2.33 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும். இதில் 40 சதவீதம் (93.31 லட்சம் ரூபாய்) மாநகராட்சிக்கு கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கம்யூனிஸ்ட், விசிக, அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, புதிதாக மேம்படுத்தப்படும் விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என்றும், அதேபோல், விளையாட்டு மைதானத்தின் இடத்துக்கு ஏற்றார்போல் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க : போக்குவரத்து பணியாளர்களின் போனஸ் என்ன ஆனது? முட்டும் ராமதாஸ்.. அமைச்சரின் பதில்?
இந்த நிலையில், கால்பந்து மைதானங்களை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மாமன்ற உறுப்பினர்கள், ரிப்பன் மாளிகையில் கால்பந்து விளையாடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில், 9 திடல்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை பெருநகர சென்னை மாநகராட்சி திரும்பப் பெற்றது.