தமிழக அரசும் பாசிசம் இல்லாமல் பாயாசமா என விஜய் கூறியது சரிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்த நாள் மற்றும் 62வது குரு பூஜையை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்து மறைந்தவர் முத்துராமலிங்கத் தேவர்.
அவரைப் பொறுத்தவரையில் கல்வியும், வீரமும் அனைவரும் பெற வேண்டும். கல்வி பெறுவதோடு மட்டுமல்லாமல், வீரத்தோடு இருக்க வேண்டும் என்ற வகையில் திண்ணை பிரச்சாரம் மூலம் எடுத்துரைத்தார். இதன் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு இளைஞர்களை அதிகமான அளவுக்கு ஈடுபடுத்தியவர் அவர்.
சென்னையில் மாநகராட்சி விளையாட்டுத் திடல் தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் விளையாட்டுத் துறைக்கே சாபக்கேடு ஏற்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விளையாட்டு வீரர்களாக முன்னேறி வருகின்றனர். இந்தச் செயலால், அவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாநகராட்சியின் இந்த செயலின் மூலம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மழுங்கடிக்ககூடிய துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் தீபாவளி நெருங்கும்பொழுது, அதற்கு முன்னதாகவே மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது வழக்கம். ஆனால், திமுக ஆட்சியில் இது வழங்கப்படுவதே இல்லை. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவருடைய தந்தைக்கு நினைவிடம் கட்ட பணம் இருக்கிறது, பேனா சின்னம் கட்ட பணம் இருக்கிறது, ஆனால் மீனவர்களின் சேமிப்பு பணத்தை உதவித் தொகையாக வழங்க தமிழக அரசுக்கு வழங்க பணம் இல்லையா? இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார்.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி விழாவுக்காக தர்காவில் தொழுகை.. முளைப்பாரிகளை வைத்து இஸ்லாமியர்கள் வழிபாடு!
பின்னர், தவெக மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “தவெக மாநாட்டில் விஜய் கூறியது சரி தான். மத்திய அரசு பாசிசத்தை நோக்கிச் செல்லும் போது, மாநில அரசும் பாசிசம் இல்லாமல் பாயாசமா? என விஜய் சரியாகத் தான் கூறியுள்ளார். திமுக அரசை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டு, அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். திமுகவினரால் எதிர்கட்சிகள் ஒடுக்கப்படுகிறது. அப்படியென்றால் இது பாசிசம் இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.
0
0