திராவிடத்தை தவறவிட்ட ஆளுநர் மேடை.. கொந்தளித்த தமிழ்நாடு.. மன்னிப்பு கோரிய டிடி தமிழ்!

Author: Hariharasudhan
18 October 2024, 7:41 pm

ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல்’ வாக்கியத்தை தவறவிட்டதற்கு டிடி தமிழ் மன்னிப்பு கோரியுள்ளது.

சென்னை: சென்னை சேப்பாக்கம் டிடி மண்டல அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைக்காட்சி பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பின்னர் நிகழ்ச்சி தொடங்கும் முன், முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அப்போது, “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடப்பட்டது சர்ச்சைக்கு உள்ளானது.

பின்னர், இது தொடர்பான காணொலிகள் வெளியான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது அதில் வரக்கூடிய “தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.

திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி. திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி. திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு. தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போது, விழா தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியவர்கள் திட்டமிட்டு தவிர்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு திராவிட நல் திருநாடு என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியிருக்கிறார்கள். இப்படி செய்வதன் மூலமாக தமிழக ஆளுநரை திருப்திபடுத்தலாம் என்ற நோக்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதை செய்திருப்பதாக தெரிகிறது. இந்த நடவடிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது. இத்தகைய போக்கை எவருமே சகித்துக் கொள்ள மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், டிடி தமிழ் தொலைக்காட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக, தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.

மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞான சம்பந்தம், “சென்னை சேப்பாக்கம் டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார் என்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ என்ற சொல் விடுபட்டது குறித்து சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரிக்க கூறப்பட்டுள்ளது. எனவே, ஆளுநர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர, ஆளுநருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ இதில் எந்தப் பங்கும் இல்லை; திராவிடர் என்ற சொல் விடுபட்டது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு விசாரிக்க கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் இந்தி மொழி கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்தி மொழி விழா கொண்டாடப்படுவதன் மூலம் இந்தி மொழி திணிக்கப்படுகிறது எனக் கூறுகின்றனர் இந்தியாவில் உள்ள அனைத்து மொழியும் கொண்டாடப்பட வேண்டியவையே. எனவே இந்தி மொழி திணிக்கப்படவில்லை.

இதையும் படிங்க : கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடியை நினைவுபடுத்திய ஐகோர்ட்.. எதற்காக தெரியுமா?

தமிழ்நாட்டில் இந்தி மொழி கற்க மிகப்பெரிய ஆர்வம் உள்ளது. இங்கு வந்த நேரத்தில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு என கூறினார்கள். ஆனால் மக்களை பார்க்கும் போது அப்படி இல்லை என தெரிந்து கொண்டேன். இந்தி திணிக்கும் மொழி அல்ல, ஒவ்வொரு மொழியும் முக்கியமானது, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த பெருமை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் விஷம் பரப்பட்டு உள்ளது” எனப் பேசினார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 344

    0

    0