இன்னும் 19 அமாவாசை தான்… திமுகவுக்கு தேதி குறிச்சாச்சு : சீறும் எடப்பாடி பழனிசாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 1:11 pm

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்களை பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கும் விடியா திமுக அரசின் சவாலை சட்டப்படி எதிர்கொள்ள கழகம் எப்போதும் தயார்!

கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான திரு. எஸ்.பி. வேலுமணி , M.L.A., சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் மீது, தனியார் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் விடியா திமுக அரசு, தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

“மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப் புதிவு கட்டண உயர்வு
உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச் சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை” என்று விடியா திமுக அரசின் மீது கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப, தனது கண் அசைவுக்கு தாளம் போடும் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டிருக்கிறார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.

இதுபோன்ற தகிடுதத்தங்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முடக்கிவிடலாம்; எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அராஜக அரசின் அவலங்களை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் எங்களது செயல்களை தடுத்து நிறுத்திவிடலாம்; போதைப் பொருட்கள் கடத்தலின் கேந்திரமாகத் தமிழகம் விளங்கும் கேவலத்தை மக்களிடம் இருந்து மறைத்துவிடலாம் என்று திரு.ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

மேலும் படிக்க: ELITE ஒயின் ஷாப் மூடல்.. இனி நாங்க நிம்மதியா இருப்போம் : இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள்.!

சகோதரர் திரு. எஸ்பி வேலுமணி அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், குறிப்பாக 2017 முதல் 2021 வரை, நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் 123 விருதுகளும், நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் உள்ளிட்ட துறைகளில் மேலும் பல விருதுகளும் பெற்று சாதனை படைத்தவர்.

விடியா திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான்; நாட்கள் எண்ணப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 219

    0

    0